இந்த வாரம்: கலாரசிகள்

முந்தைய தலைமுறையில் என்னென்ன சமூகப் பிரச்னைகள் இருந்தன? அன்றைய இலக்கியம் எப்படி இருந்தது? அன்றைய பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு எப்படி இருந்தது? இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழ

முந்தைய தலைமுறையில் என்னென்ன சமூகப் பிரச்னைகள் இருந்தன? அன்றைய இலக்கியம் எப்படி இருந்தது? அன்றைய பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு எப்படி இருந்தது? இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி அன்றைய பத்திரிகைகள்தான். அதிலும் குறிப்பாக, சமூகப் பிரக்ஞையுடன் வெளிவந்த சிறு பத்திரிகைகளும், இலக்கிய இதழ்களும் இந்த விஷயங்களில் நமக்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்குகின்றன.

  சமீபத்தில் கலைஞன் பதிப்பகத்தின் "வசந்தம்' இதழ் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்தவர் ஸர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார். அவர் கோயம்புத்தூர் வசந்தா மில்லின் அதிபரும்கூட. 1941-ல் சென்னையிலிருந்து கோவைக்குக் குடிபெயர்ந்த எழுத்தாளர்களான ஆர்.சண்முகசுந்தரமும், ஆர்.திருஞானசம்பந்தமும், ஆர்.கே.சண்முகம் செட்டியார் ஆதரவுடன் தொடங்கிய இதழ்தான் "வசந்தம்'.

  இதன் கெüரவ ஆசிரியர்களாக ஆர்.கே.சண்முகம் செட்டியாரும், "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியாரும் இருந்தனர். ஆர். திருஞானசம்பந்தம் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய பத்திரிகை இது.

  1942 ஏப்ரல் மாதம் தமிழ் வருடப்பிறப்பன்று தொட ங்கப்பட்ட வசந்தம், பல புதிய கவிஞர்களுக்கு சங்கப் பலகையாகத் திகழ்ந்தது. அந்தக் கால கட்டத்தில் கோவையில் கையெழுத்துப் பத்திரிகைகளின் தாக்கம் அதிகமாக இருந்ததாகத் தெரிகிறது. அந்தக் கையெழுத்துப் பத்திரிகைகளில் வெளிவந்த தரமான கவிதைகளையும் கட்டுரைகளையும் தேர்ந்தெடுத்து வசந்தம் பத்திரிகை வெளியிட்டு புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தது என்பது இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது தெரிகிறது.

  ஏறத்தாழ ஒரு கால் நூற்றாண்டுக்குமேல் நடத்தப்பட்டு 1968-இல் நின்றுபோன வசந்தம் பத்திரிகையின் தொகுப்பை வசந்தம் இதழின் படைப்பாளி என்ற முறையில் தொடர்புடைய கோவை நா. நஞ்சுண்டனை வைத்து தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள் கலைஞன் பதிப்பகத்தார். மறுமலர்ச்சி உள்பட அவர் வசந்தம் இதழில் எழுதிய சில சிறுகதைகளும் கட்டுரைகளும் கூட இந்தத் தொகுப்பில் இடம் பெறுகின்றன.

  விமலாரமணி, பெரியசாமிதூரன், கரிச்சான், சுகி போன்றவர்களின் ஆரம்பகால படைப்புகள் எப்படி இருந்தன என்பதற்கு இந்த இதழ்த் தொகுப்பு உதவுகிறது. இதேபோல, சரஸ்வதி, தீபம், கணையாழி, பிரசண்ட விகடன், சுதேசமித்திரன், கலாமோகினி, சக்தி போன்ற இதழ்களின் தொகுப்புகளையும் கலைஞன் பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

  தமிழுக்கும் தமிழ் இதழியலுக்கும் இவர்கள் செய்திருக்கும் மகத்தான சேவைக்காக தமிழகம் "கலைஞன்' பதிப்பகத்தாருக்கு தலை வணங்கியே தீரவேண்டும்.

  இத்தனையும் சொன்ன பிறகு தனிப்பட்ட முறையில் அடியேனுக்கு ஓர் ஆதங்கம். இப்போது பல இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தத்தான் செய்கிறார்கள். சிறு பத்திரிகைகள் ஆங்காங்கே வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இணைய தளத்தில் பல வலைப் பத்திரிகைகள் வருகின்றன. நமது தினசரிகளும் வார இதழ்களும் வசந்தம் பத்திரிகை போல் புதிய எழுத்தாளர்களை இவற்றிலிருந்து அடையாளம் கண்டு ஊக்குவித்தால் நன்றாக இருக்கும்.

*******

ஆசிரியர் சாவியின் தயாரிப்பு என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் அடையும் எழுத்தாளர் கூட்டத்தில் நானும் ஒருவன். நகைச்சுவை உணர்வுடனும் வித்தியாசமான சிந்தனையைத் தூண்டும் கதைக் கருவுடனும் கூடிய கதைகளை எழுதுவதில் சாவி சாருக்கு நிகர் அவர் மட்டுமே.

  "வாஷிங்டனில் திருமணம்' படித்து வயிறு குலுங்கச் சிரித்தவர்கள், அவரது "விசிறி வாழையை'யும், "வழிப்போக்கன்' கதைகளைப் படித்து நெகிழவும் செய்தனர். கமலாவின் கதையில் தொடங்கி கிளுகிளுப்பு இலக்கியத்தை தமிழில் புகுத்தியவர் என்ற அவலத்துக்கு ஆளானவரும் ஆசிரியர் சாவிதான்.

  ஆசிரியர் சாவி என்கிற பத்திரிகை ஆசிரியருக்கும் எழுத்தாளர் சாவி என்கிற கதாசிரியருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் வரிசையில் வைத்து போற்றக்கூடிய பல படைப்புகளை எழுத்தாளர் சாவி படைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அவரது "வேத வித்து', "ஆப்பிள் பசி' மற்றும் "விசிறி வாழை' ஆகியவை ஏன் சாகித்திய அகாதெமி விருது பெறவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது.

  ""இவ்வளவு அருமையான தரமான படைப்புகளைத் தந்திருக்கும் நீங்கள் தமிழ்ப் பத்திரிகை உலகில் கிளுகிளுப்பு இலக்கியங்களுக்கு பிள்ளையார் சுழி இட்டது ஏன்?'' என்று அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ஒரு முறை கேட்டதற்கு, ஆசிரியர் சாவி தந்த பதில்: ""நான் ஒரு எழுத்தாளன் என்ற முறையில் அதுபோல தரம் தாழ்ந்த படைப்பு எதையும் எழுதியது கிடையாது தெரியுமா?''

  ஆசிரியர் சாவி எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் ஆர்.சி.சம்பத். அகிலா பதிப்பகத்தாரின் "சாவி சிறுகதைகள்' தொகுப்பில் அவர் எழுதிய பதினாறு சிறந்த சிறுகதைகள் அடக்கம். சாவி சாரின் பல்கலைக் கழகத் தயாரிப்பு என்கிற முறையில் இப்படி ஒரு தொகுப்பை வெளிக்கொணர்ந்த நண்பர் ஆர்.சி.சம்பத்துக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அருமையான தொகுப்பு. அத்தனையும் தரமான கதைகள்.

  அதுசரி சம்பத், ஒவ்வொரு கதையும் எந்த இதழில் எப்போது பிரசுரமானது என்கிற விவரத்தை ஏன் இணைக்காமல் விட்டீர்கள்? அடுத்த பதிப்பில் இந்தக் குறை களையப்படும் என்று நினைக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com