கருத்துக்களம்: முதியோர் வதம்

புறத்தோற்றத்தில் அரசியல் தலைவராகத் தோற்றமளித்த காந்திமகான் அகத்தில் சமுதாய புனர் நிர்மாணச் சிற்பியாகவும் ஒழுக்கசீலராகவும் மனிதநேயப்பண்பாளராகவும் மக்கள் சேவகராகவும் பரிமளித்தார். அவரது பாதச்சுவடுகளில்
கருத்துக்களம்: முதியோர் வதம்

புறத்தோற்றத்தில் அரசியல் தலைவராகத் தோற்றமளித்த காந்திமகான் அகத்தில் சமுதாய புனர் நிர்மாணச் சிற்பியாகவும் ஒழுக்கசீலராகவும் மனிதநேயப்பண்பாளராகவும் மக்கள் சேவகராகவும் பரிமளித்தார். அவரது பாதச்சுவடுகளில் பயணித்த காமராஜ் அண்ணலுக்கு அணிசேர்க்கும் வகையில் மக்கள் சேவை புரிந்தார். எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததினால் ஏழைகளின் துயரங்களை உள்வாங்கி எளிதில் உணர முடிந்தது. அதற்குப் பரிகாரமும் அவரால் காணமுடிந்தது. அந்தப் படிக்காத மேதையின் பட்டறிவில் உதயமானதுதான் முதியோர் உதவித்தொகை.

குடும்பத் தலைவனாக வாழும்போது தம் மக்களின் நலனுக்காக தன் உழைப்பு மூலதனங்களை எண்ணெயாக்கி அகல்விளக்கின் திரியாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் மனிதன் முதுமை எய்தும்போது உழைப்பும் மூலதனமும் முடங்கிவிடக் கரிந்து போகும் திரியாக உருமாறிவிடுகிறான். கரியும் திரிக்கு எண்ணெய் வார்த்து ஒளியூட்ட வாரிசுகளுக்கும் பிற உறவுகளுக்கும் விருப்பம் வருவதில்லை. இசைபட வாழ்ந்த நாட்களை

அசைபோட்டபடி கால வெள்ளத்தில் துடுப்பில்லாத ஓடமாகப் பயணிக்கிறது முதுமை வாழ்க்கை.

முதியவர்களுக்குப் பொதுவில் சுமை இறக்கும் பாங்கினதாக நல்லாட்சி புரியும் அரசுகள் முதியோர் உதவித்திட்டங்களை அறிவித்து புண்ணியம் தேடிக்கொள்கின்றன. சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி நிறைவேற்றுவதில்லை. பதச் சோறாக ஒரு உதாரணம்.

ஒரு இஸ்லாமிய மூதாட்டி வயது 70. கன்னியாகவே கோலம் ஏற்ற வாரிசுகளற்ற ஏழை. முதியோர் ஓய்வூதியம் அனுபவித்து வருகிறார்.

சூலைவாதத்தினால் துயருற்றவரை கிராம ஜமாத் நல்லிதயங்கள் சென்னை பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு ஊர் செலவில் அனுப்பி வைக்கிறார்கள். சென்னை ஜமாத் அன்பர்களின் பராமரிப்பில் சுமார் 10 மாதங்கள் சென்னையிலேயே தங்கி விடுகிறார். இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியப் பயனாளி இடம் பெயர்ந்து விட்டதனால் அவருடைய ஓய்வூதியத்தை வட்டாட்சியர் அலுவலகம் ரத்து செய்து விடுகிறது. மூதாட்டி பத்து மாதங்களுக்குப் பின்னர் கிராமத்திற்கு மீண்டும் திரும்பி வருகிறார். ஜமாத்தின் நிழல் கிடைக்கிறது. பசிக்கும் பலவித அடிப்படை செலவுகளுக்கும் பிறரிடம் கையேந்த வேண்டிய நிலை. தலையாரி, கிராம நிர்வாக  அலுவலர்களை அணுகுகிறார். ரத்து செய்யப்பட்ட முதியோர் ஓய்வூதியம் திரும்பவும் கிடைக்காது என்று கைவிரிக்கின்றனர். ஒரு சமூக சேவகர் மூதாட்டிக்கு மீண்டும் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை குறைதீர் மனு அளிக்கிறார். அமைச்சர்கள் அரசியல்வாதிகள் கோரிக்கைகள் மற்றும் கையூட்டு பின்பலம் கொண்ட மனுக்களுக்கு மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்து பைசல் செய்யும் அதிகார வர்க்கம் ஏழை மூதாட்டியின் கருணை மனு மீது நடவடிக்கை எடுப்பதை அலட்சியப்படுத்துகிறது. ஓராண்டு காலப் போராட்டத்திற்குப் பின்னர் ஈரமற்ற அதிகார வர்க்கம் ரத்து செய்த ஓய்வூதியத்தைப் புதுப்பித்து ஆணை வழங்குகிறது. ஓய்வூதியம் நிலுவையுடன் மீண்டும் அவள் பெயருக்கு அஞ்சல் ஊழியர் மூலம் கதவைத் தட்டியபோது அவள் இறைவனிடம் ஐக்கியமாகி இருந்தாள்.

கிராமங்களில் பண்ணை சார்ந்த தொழில்களான ஆடு, மாடு வளர்ப்பு பால்கறவை, கோழிப்பண்ணை, கட்டில் கட்டுதல் பனை ஓலைப்பாய், பெட்டி முடைதல், தென்னைத் தட்டி முடைதல், மீன்பிடித்தல், பதநீர் இறக்குதல், கருப்புக்கட்டி, கல்கண்டு தயாரித்தல், உப்பு தயாரித்தல், காளவாசல் கட்டி, கடல் சிப்பி, குளத்துச் சிப்பி சேகரித்து சுண்ணாம்பு தயாரித்தல் போன்ற தொழில்கள் சுவடு தெரியாமல் அழிந்து போயின. தலைச்சும்மாடாகக் கிராமங்களில் தயிர், மோர், பதநீர், மீன், கருவாடு, பழங்கள், கிழங்குகள் கூவி விற்கும் மூதாட்டிகளை மருந்திற்குக்கூட காணமுடிவதில்லை. ஐம்பது காசுகளே சம்பாதித்தாலும் தன் வியர்வையில் விளைந்த முத்து என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.

முதியவர்களின் கம்பீரம் காக்கும் சுய உழைப்பு சில்லறை வியாபாரங்களும் கால வெள்ளத்தில் கரைந்துபோயின.  ரயில் பயணங்கள் சில பரிதாபங்களையும் பரிகாசங்களையும் படம் பிடித்துக் காட்டும். உரிமம் பெறாமல் வேர்க்கடலை, சுண்டல், கொய்யாப்பழம், டீ, காபி, பானங்கள் விற்கும் சில்லறை வியாபாரிகள் இரயில் பெட்டிகளில் தென்படுவது பயணிகளுக்கு ஒரு சாதாரண காட்சி. வெளியில் தெரியாத வேதனைகள் ஏராளம். சில்லறை வியாபாரிகளில் பெரும்பாலோர் முதியவர், மூதாட்டிகள். சுயமரியாதையை இழக்க மனமில்லாமல் இரயில் பயணத்தில் சில்லறை வியாபாரம் செய்து குறைந்த வருமானத்தைக் கொண்டு நிமிர்ந்து வாழும் உழைப்பின் சிறு தேவதைகள் அவர்கள்.

கைபலத்தில் வணிகம் செய்யும் எளியவர்களிடமும் கோயில் உண்டியல் கொள்ளைக்காரன் போல் கை நீட்டி லஞ்சம் வாங்கும் துப்பு கெட்ட ரயில் அலுவலர்களும் இருக்கிறார்கள். லஞ்சம் பெற்றுக்கொண்டு தன் அற்ப பணிக்குக் கணக்குக் காட்ட முறை வைத்து கேஸ் எழுதும் அலுவலர் வந்திருப்பதை மோப்பம் பிடித்து அவனிடமிருந்து தப்பிக்க கழிப்பறையினுள் ஒழிந்து கொள்கிறார் வேர்க்கடலை வியாபாரம் செய்யும் மூதாட்டி. அலுவலர் கடந்த பின்னால் காட்சி தரும் மூதாட்டி தன் சோகத்தைச் சித்திரம் வரைகிறாள்.

"இவனிடம் மாட்டிக் கொண்டால் விருதுநகர் கோர்ட்டில் ஆஜர் படுத்துவான். ஈவு இரக்கமில்லாமல் நீதிபதி மூவாயிரம் ரூபாய் தண்டம் கட்டச் சொல்வார். மதுரை நீதிபதி எல்லைக்குள் பிடிபட்டால் இரக்கம் பார்த்து மன்னிக்கவும் செய்வார். தண்டித்தால் ரூபாய் இருநூறோ முன்னூறோ தண்டம் கட்டச் சொல்வார். அதுக்காகத்தான் இந்தக் கக்கூஸில் ஓடி ஒளிகிற போராட்டம்.

திருநெல்வேலி ரயில் பயணிகளுக்கு மிகவும் அறிமுகமான இட்லி வியாபாரியை எளிதில் மறக்க முடியாது. வயது எண்பத்தி ஐந்தைத் தொடும். கூன் பின்னுக்கு இழுக்கும். இரணியா வீக்கம் முன்னுக்குத் தள்ளும். கரணம் தப்பினால் மரணம். உயிர் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இரயில் பெட்டிகளில் ஏறி இறங்கி கூவிகூவி அவர் இட்லி வியாபாரம் செய்வது கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.

நவீன இந்தியா, வளர்ச்சி முன்னேற்றத்தில் வேகம் காட்டுகிறது. தொழில் துறை சேவைத் துறைகளில் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. நஷ்டப்பட்டாலும் விவசாயம் குறைந்த விகிதத்தில்வளர்ச்சி காட்டுகிறது. இப்பெருமைக்கு காரணமாக இருப்பவர்கள் இந்திய உழைப்பாளிகள்.

விவசாயத்துறை, தொழிலாளர்கள், வாலிபப் பருவத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பின் வாயிலாகத் தங்களைத் தியாகம் செய்கிறார்கள். முதுமை அவர்களை முடக்கிப்போடும்போது குடும்பத்திற்குப் பராமரிக்கிறார்கள். குலை நடுங்கி துயரத்தில் குமைகிறார்கள். அதிகார வர்க்கம், மனது வைக்கும் சிலருக்கு முதியோர் ஓய்வூதியம் பிச்சையிடப்படுகிறது. பிற முதிய ஏழைகளை அதிகார வர்க்கம் ஏழ்மையை நிரூபிக்க அக்னிப்பிரவேசம் செய்வதற்கு கட்டளை இட்டு ஆனந்தப்படுகிறது. காந்தியும், புத்தரும் காருண்ய இயேசுவும் வள்ளலாரும் புனிதமாய் மதிக்கப்படும் இந்தியத் திருநாட்டில் ஏழை முதியவர்களிடமும் கருணை காட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com