களக்காடு - திருநெல்வேலிக்கு போதிய பஸ் வசதி இன்றி தவிக்கும் பயணிகள்

களக்காடு : களக்காடு - திருநெல்வேலி இடையே போதிய பஸ் வசதி இல்லாததால்  இப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர். களக்காடு, சுற்றுவட்டார கிராமங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருக

களக்காடு : களக்காடு - திருநெல்வேலி இடையே போதிய பஸ் வசதி இல்லாததால்  இப் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.

களக்காடு, சுற்றுவட்டார கிராமங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைத்துத் தேவைகளுக்காகவும் மாவட்டத் தலைமையகமான திருநெல்வேலிக்கு சென்று வருகின்றனர். களக்காட்டிலிருந்து திருநெல்வேலி செல்ல சேரன்மகாதேவி, தேவநல்லூர், மீனவன்குளம், நான்குனேரி என வெவ்வேறான 4 வழித்தடங்கள் உள்ளன.

இந்த 4 வழித்தடங்களிலும் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

களக்காட்டிலிருந்து திருநெல்வேலிக்கு சேரன்மகாதேவி,நான்குனேரி ஆகிய இரு பிரதான சாலை வழியாக இதுவரை அரசு பஸ்கள் ஏதும் இயக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கும் விஷயமாகும்.  தேவநல்லூர், மீனவன்குளம் வழியாக ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே நீண்ட காலமாக இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூகநல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கூடுதல் பஸ்களை இயக்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்தவித பயனுமில்லை.

கடந்த 15 ஆண்டுகளில் மக்கள்தொகை பல மடங்காக அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப களக்காடு மற்றும் சுற்றுவட்டார மக்கள் திருநெல்வேலிக்குச் செல்ல பேருந்து வசதியை அதிகரிக்கவில்லை பொதுமக்கள் குமுறுகின்றனர்.

குறிப்பாக, மீனவன்குளம், தேவநல்லூர் ஆகிய இரண்டு கிராமப்புற வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றன. களக்காட்டில் இருந்து திருநெல்வேலி செல்ல காலை 5 மணிக்கு பஸ் வசதி உள்ளது. இதேபோல இரவு 10 மணிக்குப் பிறகு திருநெல்வேலியில் இருந்து களக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு பஸ் வசதி கிடையாது.

இதனால் இரவு 10 மணிக்குப் பிறகு சென்னை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து திருநெல்வேலி வருபவர்கள் களக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குச் செல்ல மறுநாள் காலை 5 மணி வரை காத்திருக்க வேண்டும். இல்லையேல் வாடகைக் கார் மூலம்தான் ஊருக்குச் செல்ல முடியும்.

இதேபோல திருநெல்வேலியில் காலை 6 மணிக்கு புறப்படும் மும்பை ரயிலுக்குச் செல்ல வேண்டுமானால் பஸ் வசதி கிடையாது. களக்காட்டில் இருந்து முதல்நாள் இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி செல்ல வேண்டும். பின்னர். ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருக்க வேண்டும். இதுபோல மற்றொரு சிரமம் திருநெல்வேலியில் இருந்து இரவு 10 மணி பஸ்ûஸ தவற விட்டவர்கள், இரவு முழுவதும் கொசுக்கடியுடன் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் மறுநாள் காலை 5 மணிவரை காத்திருக்க வேண்டும்.   

எனவே, களக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு 4 வழித்தடங்களிலும் கூடுதலாக பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com