புவிசார்ந்த குறியீட்டுடன் இனி காஞ்சி பட்டுச்சேலை

சென்னை, செப்.14: "புவி-சார்' குறியீட்டுடன் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை வெளியிட 21 கூட்டுறவு சங்கங்கள், 11 தனி நெசவாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மற்றும் அதன் ச
புவிசார்ந்த குறியீட்டுடன் இனி காஞ்சி பட்டுச்சேலை

சென்னை, செப்.14: "புவி-சார்' குறியீட்டுடன் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை வெளியிட 21 கூட்டுறவு சங்கங்கள், 11 தனி நெசவாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள இந்த 21 கூட்டுறவு சங்கங்கள், 11 தனி நெசவாளர்கள் புவிசார் குறியீட்டுடன் பட்டுப் புடவைகளை வெளியிடலாம். தனிச்சிறப்பும், பாரம்பரியமும் மிக்க காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளாக அவை அறிவிக்கப்படும்.

இவ்வாறு பதிவு செய்யாமல் பாரம்பரியமிக்க பட்டுச்சேலைகளை தயாரிக்கும் கூட்டுறவுச் சங்கங்கள், தனி நெசவாளர்கள் பதிவு பெற்ற உரிமையாளரை அணுகி தங்களையும் பதிவு செய்துகொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மை, தஞ்சை ஓவியங்கள் உள்பட 18 வட்டாரப் பொருள்கள் "புவி-சார்' குறியீட்டு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் காஞ்சிபுரம் பட்டு உள்ளிட்ட 10 பொருள்கள் வழக்கறிஞர் சஞ்சய் காந்தியின் முயற்சியால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கான புவி-சார் குறியீடு குறித்து அவர் கூறியது:

புவி-சார் குறியீட்டுக்காக பதிவுபெற்ற கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் நெசவாளர்கள்  தயாரித்து வெளியிடும் காஞ்சி பட்டுச் சேலைகள் இனி "புவி-சார் குறியீடு பதிவு செய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டு' என்ற அடையாளத்துடன் வெளிவரும். இந்த அடையாளத்தில் ரகசிய எண் பொறிக்கப்படும். இந்த

ரகசிய எண் பொருத்தப்பட்ட அடையாளம்தான் உண்மையான காஞ்சி பட்டு என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். அதேபோல்,

குறியீட்டு அடையாளம் இல்லாத சேலைகள் போலியான காஞ்சிபுரம் பட்டு சேலைகள் என்று மக்களுக்கு அறிவிக்கப்படும்.

இதில் பதிவு செய்யாதவர்கள் புவி-சார் குறியீட்டைப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்று கூறினார் சஞ்சய் காந்தி. உலகப் பொருளாதார தாராளமயமாக்கலில் தனிச்சிறப்பும், பாரம்பரியமும் மிக்க வட்டார பொருள்கள் அழிந்து விடாமல் பாதுகாப்பதற்காக புவி-சார் குறியீடு உருவாக்கப்பட்டது. இந்தியாவில் புவி-சார் குறியீட்டுச் சட்டம் 1999-ல் இயற்றப்பட்டது.

அதனடிப்படையில், வட்டாரங்களில் தனிச்சிறப்புடன் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்கள், உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், விவசாயம் மற்றும் உணவுப் பொருள்களுக்கு புவி-சார் குறியீடு வழங்கப்படுகிறது.

இதற்காக, புவி-சார் குறியீடு பதிவு அலுவலகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தில் இந்த அலுவலகம் இயங்குகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் தலையாட்டும் பொம்மை, சேலம் வெண்பட்டு, ஆரணி சில்க்ஸ், சுவாமிமலை

வெண்கலச் சிலைகள், மதுரை சுங்குடி, நாகர்கோவில் கோயில் ஆபரணங்கள் உள்ளிட்ட 18 பொருள்கள் புவி-சார்

குறியீட்டுக்காக தமிழ்நாட்டில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. டார்ஜிலிங் டீ, ஹைதராபாத் ஹலீம் உள்பட நாடு முழுவதும் 132 பொருள்கள் புவி-சார் குறியீட்டுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், இதில் காஞ்சிபுரம் பட்டு மட்டுமே புவி-சார் குறியீட்டுடன் அங்கீகரிக்கப்பட்ட பயனாளியாக வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பதிவுபெற்ற உரிமையாளராக பதிவு செய்வது புவி-சார் குறியீட்டில் முதல்நிலை. அந்தக் குறியீட்டைப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட பயனாளியாக அனுமதி வாங்குவது இரண்டாவது நிலை.

இதில் காஞ்சிபுரம் பட்டு மட்டுமே இரண்டு நிலைகளையும் கடந்து புவி-சார் குறியீட்டைப் பயன்படுத்த அனுமதியைப் பெற்றுள்ளது என்று சஞ்சய் காந்தி மேலும் கூறினார்.

இதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து காஞ்சிபுரம் பட்டு குறித்த பழமையான ஆதாரங்களையும் புவி-சார் குறியீட்டுப் பதிவுத்துறையிடம் அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காஞ்சி பட்டை உற்பத்தி செய்பவர்களின் நலன்களைக் காப்பதற்காக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை சார்பில் புவி-சார் குறியீடு கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

புவி-சார் குறியீடு பெறுவதன் மூலம் காஞ்சிபுரம் பட்டுக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் பாதுகாப்பு கிடைக்கும். புவி-சார் குறியீடு உள்ள காஞ்சிபுரம் பட்டே உண்மையானது என்று வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இதனால் அதிகமானோர் உண்மையான இந்த காஞ்சிப் பட்டையே வாங்குவார்கள் என்பதால் ஏற்றுமதியும் பெருக வாய்ப்புள்ளதாக சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, தஞ்சாவூர் வீணை, மாமல்லபுரம் கற்சிற்பம், நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, பத்தமடை பாய் உள்ளிட்ட 20 பொருள்களுக்கு புவி-சார் குறியீட்டை வாங்கும் முயற்சியிலும் அவர்

ஈடுபட்டுள்ளார்.

இந்தக் குறியீடு பெறாத காஞ்சிபுரம் பட்டுச் சேலை நெசவாளர்கள் மற்றும் சங்கங்கள் ஆகியோர் பதிவு பெற்ற உரிமையாளர், ஆய்வு அமைப்பிடம் அனுமதி பெற்று அங்கீகரிக்கப்பட்ட பயனாளியாக தங்களை விண்ணப்பித்துக்கொள்ளலாம். இந்த நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் அவர்கள் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com