பரிதாப நிலையில் அரசு நந்தனார் பள்ளி, விடுதி

சிதம்பரம், நவ. 19: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்ட சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டங்கள் மற்றும் மாணவர் விடுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சட்டப்ப
பரிதாப நிலையில் அரசு நந்தனார் பள்ளி, விடுதி

சிதம்பரம், நவ. 19: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சுவாமி சகஜானந்தாவால் உருவாக்கப்பட்ட சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டங்கள் மற்றும் மாணவர் விடுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சுவாமி சகஜானந்தாவால் சிதம்பரம் சீர்காழி செல்லும் சாலையில் தொடங்கப்பட்டவை தான் அரசு நந்தனார் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள். இப்போது இங்கு சுமார் 1,650 பேர் படிக்கின்றனர்.

ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக 1958-ல் கட்டப்பட்ட விடுதியை அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் எஸ்.ஜே.டி பிஷ்னுராம்மேதி திறந்து வைத்தார். மொத்தமுள்ள 69 அறைகளில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 450 பேர் இங்கு தங்கிப் படிக்கின்றனர்.

தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் இந்த மாணவர் விடுதியின் ஜன்னல் கதவுகள் உடைந்தும், தரைத் தளம் மற்றும் கூரையின் காரைகள் பெயர்ந்தும் காட்சியளிக்கிறது.

மின் ஓயர்கள் அறுந்து கிடப்பதால் எந்த அறையிலும் மின் விளக்குகள் எரிவதில்லை. மின் விசிறியும் இல்லை.

இதனால், மாணவர்கள் இரவு நேரத்தில் படிக்க முடிவதில்லை. மழையில்லாத காலங்களில் அறை வெளியே உள்ள வராண்டாவில் படுத்து உறங்குகின்றனர். போதிய தண்ணீóர் வசதியில்லாததால், கழிப்பறை மிக மோசமாக மாறிவிட்டது. இதனால் அருகே உள்ள வயல்வெளியை பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, சமையல்கூடம், உணவு உண்ணும் இடம் ஆகியவை மாட்டுத் தொழுவம் போல உள்ளன. விடுதி வளாகத்தில் பன்றி, நாய், ஆடு, மாடுகள் சர்வ சாதாரணமாக திரிவதை காணலாம்.

ஆதிதிராவிடர் நலத்துறை நிதி பெற்று தாட்கோ மூலம் கட்டப்பட்டுள்ள தரமற்ற கட்டங்கள் பல சேதமடைந்து பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

விடுதி மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் சோப்பு, எண்ணெய், பாய் உள்ளிட்ட பொருள்களை துறை அதிகாரிகள் முறையாக வழங்குவதில்லை. மூன்று வேளையும் மிகவும் தரமற்ற உணவே வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் இப்பள்ளியின் கல்வி வளர்ச்சியோ அதைவிட மோசம். பொதுத் தேர்வுகளில் கடலூர் மாவட்டத்திலேயே மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் இப்பள்ளியில் தான்.

விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் இருவர் மனஅழுத்தம் காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர்கள் செல்விராமஜெயம், எம்.சி.சம்பத், ஆட்சியர் வே.அமுதல்லி ஆகியோர் பள்ளியை பலமுறை பார்வையிட்டுச் சென்றதன் பலன் என்னவோ பூஜ்யம்தான்.

எனவே, பள்ளி, விடுதி கட்டடங்களை சீரமைத்து ஏழை மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க இனியாவது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில இணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com