சாயப்பட்டறைக் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்

கரூர்: கரூரில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டதால் தேங்கியுள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  விவசாயத்திற்கு அடுத்தபடியான ஜவுளித் தொழிலின் வளர்ச்சி ஏற்றுமதியை நோக்கிச் சென்றது. இவ்வாற
சாயப்பட்டறைக் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்

கரூர்: கரூரில் சாயப் பட்டறைகள் மூடப்பட்டதால் தேங்கியுள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 விவசாயத்திற்கு அடுத்தபடியான ஜவுளித் தொழிலின் வளர்ச்சி ஏற்றுமதியை நோக்கிச் சென்றது. இவ்வாறான ஜவுளித் தொழிலின் அங்கமான வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியின் மூலமாக அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதில் கரூர் சிறந்து விளங்கி வருகிறது.

 ஆண்டுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. ஏற்றுமதித் துணி உற்பத்தியின் முக்கிய அங்கமானது அந்தத் துணிகளை உற்பத்தி செய்யும் நூல்களுக்குச் சாயமேற்றுதலாகும்.

 750 சாயப் பட்டறைகள் கரூர் மாவட்டத்தில் இயங்கி வந்தன. இதன் மூலம் ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றார்கள்.

 ஆனால், சாயப் பட்டறையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விவசாய நிலங்களிலும், நீர் நிலைகளிலும் விடப்பட்டதால் விவசாயம், நீராதாரம் பாதிக்கப்பட்டது. மனிதர்களும், கால்நடைகளும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகினர்.

 எனவே, சாயப் பட்டறைகளை மூடுவதுடன், அவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி விவசாய அமைப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

 இதையடுத்து, உயர் நீதிமன்றம் சாயப் பட்டறைகளுக்கு சில வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அவற்றை நிறைவேற்றாத சாயப் பட்டறைகளை மூடும் வகையில், முதல் கட்டமாக மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டுமென அது உத்தரவிட்டது. இதன்படி, கரூர் மாவட்டத்தில் சுமார் 400 சாயப் பட்டறைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

 இதற்கிடையே, சாயப் பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கரூர் நகரைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள 8 பொது சுத்திகரிப்பு நிலையங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

 இந்தக் கழிவுகளில் சுண்ணாம்பு, பெரஸ், இரும்புக் கனிமங்கள் சேர்ந்துள்ளன. இவற்றில் நீரில் கரையும் தன்மை கொண்ட சில ரசாயனங்களும் உள்ளதால், அவை மழையில் கரையும்போது நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதித்து வந்ததால், தேங்கியுள்ள சுமார் 40 ஆயிரம் டன் கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்ற சவால் பொது சுத்திகரிப்பு நிலையம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டது.

 இந்நிலையில், சாயப் பட்டறைக் கழிவுகளிலிருந்து சிமென்ட் தயாரிக்கப் போதுமான சுண்ணாம்பு இருப்பதை புலியூரிலுள்ள செட்டிநாடு சிமென்ட் நிறுவனம் கண்டுபிடித்தது.

 எனவே, இந்தக் கழிவுகளை ஒரு நாளுக்கு 9 டன் வீதம் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள அந்த ஆலை முன்வந்தது. இதன்படி, புலியூர், கரிக்காலியிலுள்ள சிமென்ட் ஆலைகள் இந்தக் கழிவுகளை கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தத் தொடங்கின. இதுவரை 4 ஆயிரத்து 500 டன் கழிவுகள் வெளியேற்றப்பட்டது.

 பொது சுத்திகரிப்பு நிலையத்திலிருக்கும் கழிவுகளை சிமென்ட் ஆலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு, அந்தந்த பொது சுத்திகரிப்பு நிலையங்களைச் சார்ந்தது.

 தற்போது சாயப் பட்டறைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கழிவுகளை மேலும் வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான செலவுகளை சாயப் பட்டறை உரிமையாளர்கள் ஏற்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். தொழில் செய்யாத நிலையில், கூடுதல் செலவுத் தொகையை அவர்கள் ஏற்கத் தயங்குகிறார்கள்.

 இதனால், சுமார் 35 ஆயிரத்து 500 டன் சாயக் கழிவுகளை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுப்புறச்சூழலுக்கு குந்தகம் ஏற்படுத்தும் இந்தக் கழிவுகளை அகற்றுவதில் மாவட்ட நிர்வாகமும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே விவசாயிகள், பொதுநல ஆர்வலர்களின் விருப்பமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com