பாதியில் நின்றுபோன தரைப்பாலம், சாலைப் பணிகள்

திருநாவலூர் ஒன்றியம் வானாம்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட கல்லமேடு கிராமத்தில் கடந்த
பாதியில் நின்றுபோன தரைப்பாலம், சாலைப் பணிகள்

திருநாவலூர் ஒன்றியம் வானாம்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட கல்லமேடு கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பணிகள் நிறைவு பெறாமல் பாதியில் நின்று போன கல்லமேடு சாலை மற்றும் தரைப்பாலம் பணிகளைச் சீரமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் கல்லமேடு கிராமத்தில் பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தில் ரூ.107.29 லட்சம் மதிப்பீட்டில் 3,130 மீட்டர் தூரமுள்ள ஆண்டிக்குழி-கல்லமேடு சாலையை சீரமைக்க திருச்சியைச் சேர்ந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் பெற்றது.

இதைத் தொடர்ந்து கல்லமேடு என்ற கிராமத்தில் நல்லமுறையில் இருந்த தரைப்பாலத்தை தோண்டி அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் அமைக்கப் போவதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பாலத்தை தோண்டி அப்புறப்படுத்தியதுடன் சரி. அதன் பிறகு தரைப்பாலப் பணிகள் நடைபெறவில்லை. ஆண்டிக்குழி-கல்லமேடு சாலையில் மீதமுள்ள 1 கிலோ மீட்டருக்கு மேல் தொலைவுள்ள சாலையையும் சீரமைக்கவில்லை. தரைப்பாலம் மற்றும் 1 கிலோ மீட்டர் தொலைவு சாலையை சீரமைக்காமலேயே அந்த ஒப்பந்த நிறுவனம் சென்று விட்டது.

இந்தச் சாலையை ஆண்டிக்குழி, சேந்தநாடு, விஜயங்குப்பம், ஆரிநத்தம், கூ.கள்ளக்குறிச்சி, நகர், நயினாக்குப்பம், வானாம்பட்டு, கல்லமேடு உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் போன்ற நகரங்களுக்குச் செல்ல பயன்படுத்தி வந்தனர்.

நல்லமுறையில் இருந்த பாலத்தைத் தோண்டி அப்புறப்படுத்தி விட்டதாலும், சாலையை சீரமைக்காமல் அப்படியே போட்டு விட்டதாலும் கடந்த 2 ஆண்டுகளாக அந்த சாலையை பயன்படுத்தி வந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.

÷தரைப்பாலம் மற்றும் மீதமுள்ள சாலையை சீரமைக்கக் கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உள்பட பல உயர் அதிகாரிகளின் கவனத்துக்குத் தபால் வாயிலாகவும், நேரிடையாகவும் மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே மேற்கண்ட தரைப்பாலம் மற்றும் கிராமச்சாலையை சீரமைக்க முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com