காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா

புதுக்கோட்டை, மார்ச் 9: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மது

புதுக்கோட்டை, மார்ச் 9: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா வியாழக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

 புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரில் உள்ள தர்காவில் அடக்கமாகி இருக்கும் பாவா பக்ருதீன் அவ்லியா காட்டு பாவா என அழைக்கப்பட்டதால், இந்த ஊர் காட்டுபாவா பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறது.

 இந்தப் பள்ளிவாசலுக்கு முஸ்லிம்களும், இந்துக்களும் பெருமளவில் வந்து வழிபாடு நடத்துவர். காட்டுபாவா காரணீகம் என்னும் பாடலில் இந்தத் தர்காவில் அடக்கமாகியுள்ள காட்டுபாவா குறித்து விளக்கப்பட்டுள்ளது.

 கி.பி.17-ம் நூற்றாண்டில் அரேபிய நாட்டைச் சேர்ந்த சையது பக்ருதீன் அவ்லியா என்ற மகான் திருமயத்துக்கு அருகிலுள்ள காட்டில் தங்கியிருந்தார்.

 இவர் நாகூர் தர்காவில் அடக்கமாயிருக்கும் ஷாகுல் அமீது அவ்லியாவின் பேரன் உறவு முறை ஆவார். அப்போது, புதுக்கோட்டையில் நடைபெற்ற தசரா விழாவைப் பார்த்துவிட்டு, காட்டுப் பகுதி வழியாக இரு குழந்தைகளுடன் சென்ற பிராமணப் பெண்கள் பாவாவின் பாதுகாப்பை நாடியதால், அவரும் துணையாகச் சென்றார்.

 இவர்களை வழிமறித்த கள்வர்கள் 14 பேருடன் பாவா சண்டையிட்டதில், 7 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். அவர்களில் புதரில் மறைந்திருந்த ஒரு கள்வன், பாவா மீது வாள் எய்ததில் பலத்த காயமடைந்த நிலையில் தனது சக்தியால் ஏழு கள்வர்களின் கண்களையும் குருடாக்கினார் பாவா. தங்களது தவறை உணர்ந்த கள்வர்கள் தங்களுக்கு மீண்டும் பார்வை அளிக்க வேண்டினர்.

 ஆனால், ஒருவருக்கும் மட்டும் பார்வை கிடைக்கச் செய்து, தன்னுடன் வந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை சொந்த ஊரில் பத்திரமாகச் சேர்த்த பிறகே மற்ற கள்வர்களுக்குப் பார்வை அளிப்பதாக உறுதி அளித்தார் பாவா.

 பாவாவின் கட்டளைப்படி, அவர்களை ஊரில் பத்திரமாகச் சேர்த்துவிட்டுத் திரும்பி வந்த பிறகே மற்றவர்களுக்கு பாவா பார்வையளித்தார்.

 இதையடுத்து, சில காலம் வாழ்ந்த பிறகு, பாவா மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து பாவா அடக்கமான இடத்தில் அந்தப் பகுதி மக்களால் பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகளுக்கு ஆர்க்காடு நவாப் முகமதலியும், அவரது பரம்பரையினரும் கொடையளித்தனர். புதுகை தொண்டைமான் மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் இந்த தர்காவுக்கு தாராளமாக நிதியுதவி செய்தனர்.

 1696-ல் கிழவன் சேதுபதி காலத்தில் இந்த தர்காவுக்கு கொடை வழங்கிய செய்தி இங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்துக்கள், முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தலங்களில் முக்கியமானதாகும் இந்தப் பள்ளிவாசல். இந்தப் பள்ளிவாசலில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா முஸ்லிம்கள், இந்துக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான சந்தனக்கூடு விழா கடந்த பிப்ரவரி 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 இதையடுத்து, 15 நாள்கள் தினமும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து வியாழக்கிழமை இரவு மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தனக்கூடு ஊர்வலம் வாண வேடிக்கைகளுடன் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com