பேரவைத் தலைவராகிறார் பி. தனபால்

தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் தற்போதைய பேரவை துணைத் தலைவர் பி. தனபால் போட்டியிடுவார் என்று முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
பேரவைத் தலைவராகிறார் பி. தனபால்

தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் தற்போதைய பேரவை துணைத் தலைவர் பி. தனபால் போட்டியிடுவார் என்று முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

பேரவையில் அதிமுகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அவர் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது.

இதனிடையே, அக்டோபர் 30ஆம் தேதிக்குப் பதிலாக, அக்டோபர் 10ஆம் தேதி பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநர் கே.ரோசய்யா ஒப்புதல் அளித்துள்ளதாக சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். பேரவைக் கூடும் தினத்தன்று, பேரவைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், ""பேரவைத் தலைவர் பதவியில் இருந்து டி.ஜெயகுமார் விலகியுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக, சட்டப் பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று தமிழக ஆளுநர் ரோசய்யா நாள் குறித்துள்ளார். அதன்படி, அக்டோபர் 10ஆம் தேதியன்று பேரவை கூடுகிறது. முன்னதாக, அக்டோபர் 30ஆம் தேதி பேரவை கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தினத்துக்குப் பதிலாக அக்டோபர் 10ஆம் தேதியன்று பேரவையைக் கூட்ட ஆளுநர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

பேரவைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். வேட்பு மனுக்கள் அக்டோபர் 9ஆம் தேதி நண்பகல் 12 மணி வரையில் சட்டப் பேரவைச் செயலாளரால் பெற்றுக் கொள்ளப்படும்'' என்று தனது அறிவிப்பில் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

அதிமுக அறிவிப்பு: இதனிடையே, பேரவைத் தலைவர் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் தற்போதைய பேரவைத் துணைத் தலைவரான பி.தனபால் போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

டி.ஜெயகுமாரின் ராஜிநாமாவைத் தொடர்ந்து, பேரவைத் தலைவரின் பொறுப்புகள் அனைத்தும் துணைத் தலைவர் என்கிற முறையில் தனபாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவரே பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என அதிமுக அறிவித்துள்ளது.

வெற்றி நிச்சயம்: சட்டப் பேரவையில் 151 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக அதிமுக திகழ்கிறது. சட்டப் பேரவைத் தலைவர் தேர்தலில் எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமலேயே அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பி.தனபால் வெற்றி பெற்று விடுவார். இருப்பினும், சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்து வெற்றி பெற்ற சில சிறிய கட்சிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவின் வேட்பாளரான தனபாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இதுகுறித்து, சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் கூறுகையில், ""அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தில் பேரவைத் தலைவராக தனபால் தேர்வு செய்யப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பேரவைத் தலைவர் இருக்கையில் அவர் முறைப்படி அமர வைக்கப்படுவார். இதன்பின்பு, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு சட்டப் பேரவையின் வைரவிழா கொண்டாட்டம் அக்டோபர் 29ஆம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 30ஆம் தேதி முதல் சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத் தொடரின்போது பேரவை துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என அவர்கள் தெரிவித்தனர்.

பேரவையின் 19-வது தலைவர்

தமிழக சட்டப் பேரவையின் 19-வது தலைவராக பி.தனபால் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவான அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அவர், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

1951 மே 16ஆம் தேதி சேலம் கருப்பூரில் பிறந்தார். எம்.ஏ. பட்டதாரியான அவருக்கு கலைச் செல்வி என்ற மனைவியும், லோகேஷ் என்கிற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். அதிமுக தொடங்கிய காலத்தில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, 1980, 1984, 2001ஆம் ஆண்டு தேர்தல்களில் சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பேரவை துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.

19-வது தலைவர்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அமைக்கப்பட்ட 14 சட்டப் பேரவைகளில் 18 பேர் தலைவர்களாக இருந்துள்ளனர்.

ஜெ.சிவசண்முக பிள்ளை, என்.கோபால மேனன் (1952-1957), கிருஷ்ணராவ் (1957-1962), எஸ்.செல்லபாண்டியன் (1962-1967), சி.பா.ஆதித்தனார், புலவர் கே.கோவிந்தன் (1967-1971), கே.ஏ.மதியழகன், புலவர் கே.கோவிந்தன் (1971-1976), முனுஆதி (1977-1980), கே.ராஜாராம் (1980-1984), பி.எச்.பாண்டியன் (1985-1988), தமிழ்குடிமகன் (1989-1991), ஆர்.முத்தையா (1991-1996), பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் (1996-2001), கே.காளிமுத்து (2001-2006), ஆர்.ஆவுடையப்பன் (2006-2011), டி.ஜெயகுமார் (2011 மே முதல் 2012 செப்டம்பர் 29 வரை).

புதிய தலைவராக பி.தனபால் தேர்வாகும் பட்சத்தில், அவர் சட்டப் பேரவையின் 19-வது தலைவராக இருப்பார்.

உறுப்பினர்கள் எண்ணிக்கை

சட்டப் பேரவையில் நியமன உறுப்பினர் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் 235 பேர் உள்ளனர். கட்சி வாரியாக உறுப்பினர்களின் எண்ணிக்கை:

அதிமுக 151

தேமுதிக29

திமுக 23

மார்க்சிஸ்ட் 10

இந்திய கம்யூனிஸ்ட் 8

காங்கிரஸ் 5

பாமக 3

மனிதநேய மக்கள் கட்சி 2

புதிய தமிழகம் 2

பார்வர்டு பிளாக் 1

நியமன உறுப்பினர் 1

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com