தனியார் மருத்துவக் கல்லூரிகளால் கபளீகரம் செய்யப்படும் இடங்கள்!

புதுச்சேரியில் இளங்கலை மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த இடங்களே அளிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், முதுகலை படிப்புகளுக்கு ஒரு இடத்தைக்கூட ஒதுக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் இளங்கலை மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த இடங்களே அளிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், முதுகலை படிப்புகளுக்கு ஒரு இடத்தைக்கூட ஒதுக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியும், 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. இதில் 4 மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாகும்.

இந்த மருத்துவக் கல்லூரிகள், கடந்த 2011-ம் ஆண்டு இளங்கலை படிப்பான எம்.பி.பி.எஸ்-ல் 264 இடங்களை அரசுக்கு அளித்தன. 2012-ம் ஆண்டில் 265 மருத்துவ இடங்கள் கிடைத்தன. இது மொத்த இடங்களில் 30 விழுக்காடு.

இதுவும் ஒவ்வொரு ஆண்டும் முதல்வர் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது.

அப்போது, தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கும் இடத்தை அப்படியே அரசு ஏற்றுக்கொள்கிறது. அவர்கள் கேட்கும் கட்டணத்தையும் நிர்ணயிக்கிறது. மேலும் எம்.பி.பி.எஸ். படிப்பின் 75 விழுக்காட்டு இடங்களை நிர்வாக இட ஒதுக்கீடாக அளித்து, பெரும் வருவாயை மருத்துவக் கல்லூரிகள் ஈட்டி வருகின்றன.

 அதோடு, முதுகலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புகளில் அரசுக்கு வழங்க வேண்டிய 50 விழுக்காடு இடங்களில் ஒன்றைக்கூட அரசு கேட்டுப்பெறுவதில்லை.

ஸ்ரீமணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் 52 இடங்கள், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 48 இடங்கள், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் 92 இடங்கள், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் 18 இடங்கள், விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் 37 இடங்கள், அறுபடைவீடு மருத்துவக் கல்லூரியில் 37 இடங்கள், லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரியில் 6 இடங்கள் என மொத்தம் 290 எம்.டி., எம்.எஸ். மற்றும் பட்டயப் படிப்புகள் உள்ளன.

இதில் 50 விழுக்காட்டை புதுச்சேரி அரசுக்கு அளிக்க அகில இந்திய மருத்துவக் கழகம் கடந்த 2009- ஆண்டு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால், தற்போதுவரை இந்த மருத்துவக் கல்லூரிகள் 290 இடங்களில் 50 விழுக்காடு இடங்களான, 145 இடங்களை அளிக்கவில்லை.

தற்போதைய நடைமுறைப்படி, ஒவ்வொரு முதுகலைப் படிப்புக்கான இடமும் சுமார் ரூ.1 கோடி முதல் ரூ.1.50 கோடி வரை நிர்வாக ஒதுக்கீட்டில் விலை போவதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு விலை மதிப்புள்ள இடங்களை அரசு எவ்வித உள்நோக்கமும் இன்றி விட்டுத்தர முகாந்திரமில்லை என்பது கல்வியாளர்களின் புகாராக இருக்கிறது.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை படிப்புகளுக்கான அனுமதி கிடைக்காத நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியிலும் இடங்களைக் கேட்டுப்பெற அரசு முன்வரவில்லை.

மருத்துவக் கல்லூரிகளின் முதலாளிகளுக்குத் துணைபோகும் மாநில அரசுகளால், மாணவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டே, மருத்துவ உயர்கல்விப் பயில, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வை நடத்த மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

அப்படியிருந்தும், இந்த பொது நுழைவுத்தேர்வை எதிர்ப்பதாகவும் புதுச்சேரி அரசு கூறி வருகிறது.

இளங்கலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தை அரசு அணுகியிருப்பதே இதற்கு காரணமாகும். அதனால் முதுகலைப் படிப்புக்கான நுழைவுத் தேர்வையும் எதிர்க்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறிக்கொள்கிறது.

ஆனால், இந்த நுழைவுத் தேர்வு மூலம் முதுகலைப் படிப்புக்குத் தேர்வாகும் எம்.பி.பி.எஸ். முடித்த மருத்துவர்களுக்கு, தனியார் கல்லூரிகள் 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டியிருக்கும்.

அந்த வகையிலும் தனியார் கல்லூரிகளுக்குச் சாதகமான போக்கையே அரசு கடைப்பிடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக மாநிலச் செயலர் ஆ.அன்பழகன் கூறியது:

மருத்துவக் கவுன்சில் அனுப்பிய சுற்றறிக்கைப் படி நடவடிக்கை எடுக்காமல், முதல்வர் ரங்கசாமி மெüனம் காப்பது, மாணவர்களுக்கு செய்யும் துரோகம். மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் அனைவரும் ரூ.1 கோடிக்கு மேல் செலவழித்து முதுகலைப் படிப்பு படிப்பதென்பது முடியாத காரியம். அரசு இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இட ஒதுக்கீடு பற்றிப் பேச நிபுணர் குழு அமைக்க துணை நிலை ஆளுநர் முன்வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com