உச்ச நீதிமன்றத்தில் மத்தியக் குழு அறிக்கை: டெல்டா விவசாயிகள் கடும் அதிருப்தி

டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரி 5ஆம் தேதி ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழு, இங்கு பயிரிடப்பட்ட பயிர்களைக் காப்பாற்ற 2.44 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தேவைப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
உச்ச நீதிமன்றத்தில் மத்தியக் குழு அறிக்கை: டெல்டா விவசாயிகள் கடும் அதிருப்தி

டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரி 5ஆம் தேதி ஆய்வு செய்த மத்திய நிபுணர் குழு, இங்கு பயிரிடப்பட்ட பயிர்களைக் காப்பாற்ற 2.44 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தேவைப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

உச்ச நீதிமன்ற ஆணைப்படி மத்திய குழு பிப்ரவரி 5ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது. இந்தக் குழு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை அறிக்கை அளித்தது. அதில், டெல்டா மாவட்டங்களில் இப்போது சாகுபடியில் உள்ள 45,000 ஏக்கர் நெற்ப் பயிருக்கு ஒரு பாசனத்துக்காக 0.71 டி.எம்.சி. தண்ணீரும், 55,000 ஏக்கருக்கு இரு பாசனத்துக்காக 1.73 டி.எம்.சி. தண்ணீரும் என மொத்தம் 2.44 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவைத் தலைவர் பி. கலைவாணன் தெரிவித்தது:

ஒரு நாளில் முழுமையாகப் பார்வையிட இயலவில்லை என அந்தக் குழுவினரே குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு முழுமையாகப் பார்வையிடாமல் அறிக்கையில் 2.44 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது எனக் குறிப்பிட்டது விவசாயிகளிடையே வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல மன வேதனையை அளிக்கிறது. நிலத்தடி நீர் வசதியுள்ள விவசாயிகளிடமிருந்து நீரைப் பெற்றும், நீர் தேங்கியுள்ள குளம், குட்டைகளிலிருந்து அதிக செலவு செய்து நீரைப் பெற்றும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பாக்டீரியா கரைசல் தெளித்தும் விவசாயிகள் பயிரைக் காப்பாற்றி வருகின்றனர்.

இப்போது, 2.75 லட்சம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்துள்ளது. மேலும், 3.25 லட்சம் ஏக்கர் பயிரில் தண்ணீர் இல்லாமலே கதிர் உருவாகி பாதி பதராக அறுவடை நிலையில் உள்ளது. மேலும், 3 லட்சம் ஏக்கரில் ஒரு பாசனம் வேண்டியும், 1.8 லட்சம் ஏக்கரில் இரு பாசனம் வேண்டிய நிலையிலும், பயிர்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு இருக்கின்றன. இப்போது மொத்தம் 9.31 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் மத்திய நிபுணர் குழு 2.44 டி.எம்.சி. மட்டுமே தேவைப்படுகிறது எனக் கூறியிருப்பது உண்மைக்கு முரணாக உள்ளது என்றார் அவர்.

விவசாயி ராயமுண்டான்பட்டி வெ. ஜீவகுமார் தெரிவித்தது:

நிபுணர் குழு பார்வையிட்டுச் சென்றபோது கூடுதலாகத் தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தக் குழு 325 கிமீ பயணம் செய்து 14 இடங்களில் சாலையோரத்தில் உள்ள வயல்களை மட்டுமே பார்வையிட்டது. மகசூல் பாதிப்பு, விவசாயிகள் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து வயலில் பாய்ச்சியது உள்ளிட்ட சிரமங்களைப் பார்வையிட்டனர். தமிழக அரசு கோரியதில், மூன்றில் ஒரு பங்குகூட மத்திய குழு அறிக்கையில் குறிப்பிடவில்லை. இது, மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

எனவே, தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்திலும் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com