முதல்வர் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்: அரசு அறிவிப்பு

புயல், சுனாமி, வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ளவும், நிவாரணம் வழங்கவும் முதல்வர் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்: அரசு அறிவிப்பு

புயல், சுனாமி, வெள்ளம் மற்றும் வறட்சி உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்ளவும், நிவாரணம் வழங்கவும் முதல்வர் தலைமையில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை தொடர்பான புதிய கொள்கை தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள விவரம்:

புயல், சுனாமி, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பேரிடர் காலங்களில் பொறுப்புகளைப் பகிர்ந்து வழங்குவதற்காக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும். பேரிடர் தடுப்பு, மேலாண்மை, மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக மேலாண்மை ஆணையத்தோடு மாநில அளவிலான நடவடிக்கைக் குழு ஒன்றும் அமைக்கப்படும்.

பேரிடர் கொள்கைகளில் உரிய பரிந்துரைகளை சமர்ப்பித்தல், பேரிடருக்குப் பிறகு நிவாரணம் வழங்குவதற்கான வழிமுறைகள், மாநிலப் பேரிடர் மேலாண்மை திட்டத்துக்கு அனுமதி வழங்குதல், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுதல், பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுப் பணிகளை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகளை மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும்.

இந்த ஆணையத்தோடு, மாநில நிவாரண ஆணையர் தலைமையில் வருவாய் நிர்வாகத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத் துறை, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் அடங்கிய கோட்ட அளவிலான குழுக்கள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், சமுதாயம் ஆகியவை பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.

பேரிடர் காலங்களில் மாநில வருவாய்த் துறைச் செயலாளர், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள், ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு துறைகளுடன் தொடர்பு கொள்ளுவார். நிவாரணப் பணிகளுக்காக மாநில நிவாரண ஆணையருக்குத் தேவைப்படும் நிதியையும் வருவாய்த் துறை வழங்கும்.

அவசர கால நடவடிக்கைக் குழு: பேரிடர் காலங்களில் மாநில நிவாரண ஆணையர் தலைமையில் அவசர கால நடவடிக்கைக் குழு அமைக்கப்படும். இந்தக் குழு மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கான முகமையாக இருக்கும்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைகளோடு கலந்து ஆலோசித்த பிறகு மாநில அளவிலான திட்டங்களை நிவாரண ஆணையர் வகுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது போன்றவற்றுக்கு இவர்தான் பரிந்துரையை அனுப்ப வேண்டும்.

அதேபோல், பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பரிந்துரையையும் இவர்தான் வழங்க வேண்டும்.

மாவட்டக் குழுக்கள்: மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான அவசர கால நடவடிக்கைக் குழுக்கள் செயல்படும். பேரிடர் காலத்தின்போது போலீஸ், ஊர்க்காவல் படையினர், வனத்துறையினர் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணியாளர்களும் ஆட்சியரின் தலைமையின் கீழ் பணியாற்ற வேண்டும். ராணுவம், துணை ராணுவப் படையினரோடும், ரயில்வே, தொலைத்தொடர்பு துறையினரோடும் ஆட்சியர் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நன்கொடைக்கு அனுமதி பெற வேண்டும்: பேரிடர் காலங்களில் சர்வதேச, தேசிய அளவிலான அமைப்புகள், அறக்கட்டளைகளிடமிருந்து உதவிகளைப் பெறுவதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர்கள் மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

நிதியுதவி தொடர்பாக தனி கணக்கை அவர்கள் பராமரிக்க வேண்டும்.

ராணுவம் மற்றும் துணை ராணுவப் பிரதிநிதிகள் உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளும் பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை அமைப்புகளில் இடம்பெறுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com