ஏடிஎம்-ல் நூதன மோசடி: ஏமாந்தவரே பொறிவைத்துப் பிடித்த விநோதம்

ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் மோசடி செய்தவரை பாதிக்கப்பட்ட நபரே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

புதுச்சேரி : ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் மோசடி செய்தவரை பாதிக்கப்பட்ட நபரே பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகர் முதல் குறுக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (43). இவர் நகராட்சி துப்புரவு ஊழியராக உள்ளார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதியன்று நீடராஜப்பர் வீதியில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

பெருமாளுக்கு ஏடிஎம் மையத்தை பயன்படுத்த தெரியாததால் அங்கு நின்றிருந்த ஒரு நபரிடம் உதவி கேட்டுள்ளார். அவரும் உதவி செய்வதாகக் கூறி ஏடிஎம் அட்டை மூலம் பணம் எடுத்து பெருமாளிடம் கொடுத்துள்ளார். பின்னர் ஏடிஎம் அட்டையை அந்த நபரிடம் இருந்து பெற்றுக் கொண்டு பெருமாள் திரும்பினார்.

சிறிது நேரம் கழித்து, அந்த நபர் கொடுத்த அட்டை தன்னுடையது இல்லை என்ற சந்தேகம் பெருமாளுக்கு எழுந்தது. இதனையடுத்து வங்கிக் கிளையில் விசாரித்தபோது, அது பெருமாளின் ஏடிஎம் அட்டை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னரே ஏடிஎம் மையத்தில் உதவி செய்வதாகக் கூறிய நபர் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்துள்ளது உறுதியானது. மேலும் அவரது கணக்கில் இருந்து ரூ. 9,800 பணமும் எடுக்கப்பட்டது. அந்த பணம் சென்னையில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று மதியம் 2.30 மணியளவில் நீடராஜப்பர் வீதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு பெருமாள் மீண்டும் சென்றார். அப்போது பிப்ரவரி மாதம் தன்னிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ஏமாற்றிய நபர் வங்கி வாசலில் நிற்பதை பார்த்துள்ளார். பின்னர் வங்கி மேலாளர் உள்ளிட்ட அங்கிருந்தவர்கள் சிலரின் உதவியுடன் அந்த நபரை பெருமாள் மடக்கிப் பிடித்தார்.

அதன் பின்னர் அந்த நபரை பெரியகடை காவல்நிலையத்தில் பெருமாள் ஒப்படைத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸா, விசாரித்தனர். அப்போது அவர் கடலூர் மாவட்டம் முதுநகர் சோலை நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (34) என்பது தெரியவந்தது.

மேலும் இதேபோல மோசடி செய்ததாக திருப்பாபுலியூர் காவல்நிலையத்தில் வெங்கடேசன் மீது 3 வழக்குகள் உள்ளன. இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த ரூ. 9000-த்தை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com