துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் மூன்றரை மணி நேரம் விசாரணை

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை மூன்றரை மணி நேரம் விசாரணை செய்தனர்.
துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் மூன்றரை மணி நேரம் விசாரணை

டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை மூன்றரை மணி நேரம் விசாரணை செய்தனர்.
இதுகுறித்த விவரம்: ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகள் உள்பட 55 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 7, 8-ஆம் தேதிகளில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் விஜயபாஸ்கர் வீடுகளில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆவணமும் கைப்பற்றப்பட்டது.
இதில் கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி இயக்குநராக இருந்தபோது தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்தும், அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகவும் புகார்கள் கூறப்பட்டது தொடர்பாகவும் வருமான வரித் துறையினர், அவர் வீட்டில் சோதனை செய்தனர். இச்சோதனையில் அவர் வீட்டில் இருந்து 2 கிலோ தங்க நகையும், சில முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
மூன்றரை மணிநேரம் விசாரணை: ஏற்கெனவே கடந்த 12-ஆம் தேதி கீதாலட்சுமியிடம் முதல் கட்ட விசாரணையை வருமான வரித் துறையினர் நடத்தினர். இரண்டாவது கட்டமாக கீதாலட்சுமி, வருமான வரித்துறை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை நண்பகல் ஆஜரானார்.
அவரிடம் துணை இயக்குநர் கார்த்திக் மாணிக்கம் தலைமையிலான வருமான வரித்துறை அதிகாரிகள், பல கட்டங்களாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மாலை 6.30 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்றது. விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கீதாலட்சுமியிடம் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கீதாலட்சுமியின் ஆடிட்டரும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நண்பகலில் வந்தார். கீதாலட்சுமி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சில ஆவணங்களுக்கு அவர் விளக்கமளித்தார். அதேபோல அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரும், சில ஆவணங்களை வருமான வரித் துறை அலுவலகத்தில் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com