கோரிக்கைகளை ஏற்றால்தான் பேச்சு: கே.பி.முனுசாமி

அதிமுகவை இணைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் வைத்த 2 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் முன்னாள் அமைச்சர்
கோரிக்கைகளை ஏற்றால்தான் பேச்சு: கே.பி.முனுசாமி

அதிமுகவை இணைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் வைத்த 2 கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
அதிமுகவை இணைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு கே.பி.முனுசாமி கூறியது:
மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கியபோது இரண்டு கோரிக்கைகளை வைத்தார். ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும். தினகரன் உள்பட சசிகலாவின் குடும்பத்தை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரினார்.
பிரமாண வாக்குமூலத்தை...இப்போது பல்வேறு நிகழ்வுகளுக்குப் பிறகு ஆட்சியில் இருப்போர் சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாகக் கூறியுள்ளனர். அப்படி நீக்குவது என்றால் பொதுச்செயலாளர் சசிகலா, துணைப்பொதுச் செயலாளர் தினகரன் என்று தேர்தல் ஆணையத்திடம் பிரமாண வாக்குமூலம் கொடுத்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். சசிகலா, தினகரனிடம் இருந்து ராஜிநாமா கடிதம் பெற வேண்டும். அதற்குப் பிறகு சசிகலாவின் குடும்பத்தினருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிக்கை வெளியிட வேண்டும்.
சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும்: ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்ய வேண்டும். இதனை நிறைவேற்றுவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. இதை நிறைவேற்றினால் நிச்சயம் பேச்சுவார்த்தை நடைபெறும்.
முதல்வர் பதவி கேட்கவில்லை: மூத்த அரசியல்வாதியான தம்பிதுரை பேசும்போது எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்று கூறியுள்ளார். முதல்வர் பதவி வேண்டும் என்று அவரிடம் கேட்காதபோது அவர்களே முன்வந்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
வெளியேற்றம் நாடகம்: சசிகலாவால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் உண்மையான தொண்டர்களால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சசிகலா குடும்பத்துக்குள் இருக்கும் சண்டையால் தினகரனை வெளியேற்றுவதற்காக சசிகலாவும், நடராஜனும், திவாகரனும் சேர்ந்து அமைச்சர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி ஏதோ ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் என்ற சந்தேகம் உள்ளது. இந்த நாடகத்துக்கு எடப்பாடி பழனிசாமி இணங்கக்கூடாது. இதனால், அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாதீர்கள் என்று தொண்டர்கள் எங்களிடம் கூறி வருகின்றனர்.
ஓபிஎஸ்ஸை அவமானப்படுத்தலாமா?: அமைச்சர் ஜெயக்குமார் பக்குவம் இல்லாத அரசியல்வாதியைப் போல பேசுகிறார். சசிகலாவை நீக்கியதை முதல் வெற்றி என்று பன்னீர்செல்வம் கூறினார். இதற்கு ட்ரம்ப் வெற்றிபெற்றதும் தன்னால்தான் என்று பன்னீர்செல்வம் கூறுவார் என ஜெயக்குமார் கேலி செய்துள்ளார். ஒருவரை அவமானப்படுத்திவிட்டு, எப்படி பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட முடியும்?
அரசியலில் வெற்றிடம்: தமிழக அரசியலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை முழுமையாக நிரப்பக்கூடிய மக்கள் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com