பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இல்லை: ஆர்.வைத்திலிங்கம் எம்.பி.

ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று அதிமுக (அம்மா) அணியின் மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இல்லை: ஆர்.வைத்திலிங்கம் எம்.பி.

ஓ.பன்னீர்செல்வம் அணியுடனான பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இல்லை என்று அதிமுக (அம்மா) அணியின் மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும், சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஓ.பி.எஸ்., அணியினர் முன்வைத்துள்ளனர். அதன் பிறகே அதிமுக (அம்மா) அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்த அதிமுக (அம்மா) அணி, முதலில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அதில் கோரிக்கைகள் குறித்து விவாதிப்போம் எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து, அதிமுக (அம்மா) அணியின் மூத்த நிர்வாகியும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் (அதிமுக-அம்மா) தயாராக இருக்கிறோம். அவர்கள் (ஓ.பி.எஸ்., அணி) வந்தால் பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம்.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை. பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சில கருத்துகளைக் கூறியுள்ளார். எங்களது ஒரே குறிக்கோள், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும். கட்சியின் சின்னமான இரட்டை இலையைத் திரும்பப் பெற வேண்டும்.
ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளை மதித்து ஒன்றுபட்டு நல்லாட்சியைக் கொடுக்க வேண்டும் என்பது விருப்பம். அதற்காக, ஒன்றுபட்டுச் செயல்பட பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம்.
ஜெயலலிதாவின் மரணம்: ஜெயலலிதாவின் மரணத்தின் போது ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தார். அவர் நினைத்தால் விசாரணை ஆணையம் அமைத்திருக்கலாம். மறைந்த ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது.
எங்களது ஒரே நோக்கம் ஒன்றுபட்டு ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதாகும். இழந்த இரட்டை இலையை மீட்டு ஒரு வலுவான இயக்கமாக நான்கு வருடம் தொடர்ந்து ஒரு நல்லாட்சி தருவதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.
நிபந்தனைகள் விதித்தாலும் பேசத் தயார்: நாங்கள் நிபந்தனைகள் ஏதும் விதிக்கவில்லை. அவர்கள்தான் நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அதைக்கூட பொருட்படுத்தவில்லை. மகிழ்ச்சியாக இரண்டு பேரும் ஒற்றுமையாக இருந்து உட்கார்ந்து பேசுவதற்குத் தயாராக இருக்கிறோம்.
நாடகம் இல்லை: டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்ததில், எந்த நாடகமும் இல்லை. நாங்கள் அவரிடம் விலகும்படி வற்புறுத்தினோம். அவரும் மகிழ்ச்சியோடு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் வைத்திலிங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com