புதுவையில் ஆட்சி அமைப்போம் என பாஜக கூறுவது வேடிக்கையாக உள்ளது: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம் என பாஜகவினர் கூறுவது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் ஆட்சி அமைப்போம் என பாஜக கூறுவது வேடிக்கையாக உள்ளது: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம் என பாஜகவினர் கூறுவது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உள்ள கமிட்டி அறையில் இன்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் வரும் 16-ம் தேதி காலை 10.30 மணியளவில் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் வரை விமான சேவை தொடங்க உள்ளது. கடந்த 2 வருடங்களாக விமான சேவை நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் வருகையும் குறைந்தது. தற்போது விமான சேவை துவங்க உள்ள நிலையில் சுற்றுலா வளர்ச்சி மட்டுமல்லாமல் வியாபாரம் வளர்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

16-இல் விமான சேவை தொடக்கம்
புதுச்சேரி-ஹைதராபாத், புதுச்சேரி-விஜயவாடா ஆகிய இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் விமான சேவையைச் தொடங்க உள்ளது. விமான சேவையைத் தொடங்க மத்திய அமைச்சரை அழைத்துள்ளோம். விரைவில் பெங்களூரு, கோவை, கொச்சி, திருப்பதி ஆகிய இடங்களுக்கும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சரக்கு போக்குவரத்து தொடங்க பணிகள் துரிதம்
புதுவை துறைமுகத்தில் கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரத்தில் 3000 கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் எடுத்து டிசிஐ சார்பில் பணி நடைபெற்றது.

95 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.  துறைமுகம் பயன்பாட்டுக்கு வந்தால் புதுவை மாநிலத்துக்கு வருவாய் கிடைக்கும், வேலைவாய்ப்பு பெருகும்.

சரக்கு சேவை இருப்பதன் மூலமாக மாநிலத்திற்கு வருவாய் பெருகும் சூழல் உள்ளது. மத்திய கடல்வழி போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். புதுச்சேரியில் அமையவுள்ள துணை துறைமுகத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். துறைமுக அமைச்சர் கந்தசாமி இத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்த தீவிரமாக முனைந்துள்ளார்.

நியமன உறுப்பினர்கள் நியமித்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பாஜகவை சேர்ந்தவர்கள் புதுச்சேரியில் விரைவில் பாஜக ஆட்சி மலரும் என்றும் அறிக்கை விட்டுள்ளனர். சட்டப்பேரவையில் ஒரு உறுப்பினர்கள் கூட இல்லாத நிலையில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று கூறுவது வேடிக்கையாக விந்தையாக உள்ளது.

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு எதிர்கட்சிகளில் இருந்து 2 வாக்குகள் கிடைக்கவில்லை . பாஜக புதுச்சேரியில் வேரூன்ற முடியாத கட்சி.
ஆனால் ஆட்சிக்கு வருவோம் என்று செல்வது விரக்தியின் போக்கை காட்டுகிறது. ஜனநாயக முறையில் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும். 18 பேர் தேர்தலில் நின்றும் டெபாசிட் கூட பெறவில்லை. அவர்கள் ஆட்சி அமைப்போம் என்று கூறுவது பகல் கனவு காண்கின்றனர்.

15-வது நிதி ஆணையத்தில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளேன். மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை சேர்க்க நடவடிக்கை
எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். திட்டமல்லா செலவுகளுக்காக கடந்த 5 ஆண்டுகளாக ரூ.567 கோடி  தான் பெற்றுள்ளோம். மேலும் மத்திய அரசில் இருந்து கிடைக்கக்கூடிய 10 சதவீதி நிதி கிடைக்கவில்லை. எனவே 1ரூ.1250 கோடி கூடுதல் நிதிக்காக மத்திய அரசை அணுகி கூறியுள்ளோம்.

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றியுள்ளோம். அதற்கான நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை. சிறிய மாநிலத்தில் நாம் 2500 கோடி ரூபாய் அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் பென்ஷனுக்காக செலவு செய்கிறோம். முறைகேடாக ஆட்கள் நியமிக்கப்பட்டவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்காக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  ஜிஎஸ்டி மூலம் வருமானத்தை உயர்த்த என்ன செய்யலாம் என அரசு ஆலோசித்து வருகிறது.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி சமூக வலை தளங்களில் கூறும் கருத்துக்களுக்கு நான் பதில் கூற மாட்டேன். எனக்கு நேரிடையாக கடிதம் எழுதட்டும்.

செப்டம்பர் முதல் வாரம் ஒரு தொகுதியில் குறைகேட்பு 

வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரம் ஒரு தொகுதியில் குறைகேட்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். எனது தலைமையில், அமைச்சர்கள்,
எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் நேராக சென்று, மக்களை சந்தித்து சம்பவ இடத்திலேயே குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றார்
நாராயணசாமி. 

எம்.என்.ஆர். பாலன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com