தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 15 பேர் உயிரிழப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் அரசு கவனம் செலுத்தத் தவறிவிட்டது. இதனால், கடந்த சில ஆண்டுகளில் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. எனவே, கொசு ஒழிப்பை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட நோய்களால் இறந்தவர்கள் விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்குன் குனியாவால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை 13,840 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 420 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 30-லிருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், கொசுக்களை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமில்லாத ஒன்று, கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com