ரயில் முன் பாய்ந்து கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை: பணிச்சுமை நெருக்கடியே காரணம் என புகார்

தஞ்சாவூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிக்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ரயில் முன் பாய்ந்து கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை: பணிச்சுமை நெருக்கடியே காரணம் என புகார்

தஞ்சாவூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிக்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் அருகேயுள்ள ரெட்டிபாளையம் சாலை வித்யா நகரைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் மகன் வெங்கடேசன் (34). இவர் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள தலையாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது.
இந்நிலையில், ரெட்டிபாளையம் ரயில்வே கேட் அருகே வெள்ளிக்கிழமை இரவு அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக வெங்கடேசனின் சடலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அவரது சாவுக்குப் பணிச்சுமை, உயர் அலுவலர்கள் அளித்த நெருக்கடியே காரணம் என தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்றச் சங்கம் சனிக்கிழமை புகார் தெரிவித்தது.
இதுகுறித்து சங்கத்தின் ஒரத்தநாடு வட்டத் தலைவர் ஜீவானந்தம் கூறியது:
வெங்கடேசன் இரு ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர்ந்தார். உயர் அலுவலர்களின் நெருக்கடி, கெடுபிடி, பணிச்சுமைக் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். குறிப்பாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுப்பு அறிக்கையை விரைந்து கொடுக்குமாறு கூறி உயர் அலுவலர்கள் தொடர் நெருக்கடி கொடுத்தனர். இதனால், வெங்கடேசன் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என்றார்.
தஞ்சாவூர் வட்டாட்சியர் குருமூர்த்தி தெரிவித்தது:
முதலில் ஒருமாத காலத்தில் குடும்ப அட்டைகளை பயோ மெட்ரிக் கார்டுகளாக மாற்றுவது தொடர்பாக கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளுமாறு உத்தரவு வந்தது. அடுத்து, இலவச வேட்டி, சேலைகளை 3 நாள்களுக்குள் கொடுக்குமாறு கூறினர். பின்னர், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுத்து உடனடியாக அனுப்புமாறு கூறினர். இப்போது, சீமைக் கருவேல மரங்களை பிப். 10-ம் தேதிக்குள் அகற்றுமாறு கூறுகின்றனர். அனைத்து பணிகளையும் ஒரே நேரத்தில் எப்படிச் செய்ய முடியும் என்றார்.
சங்கத்தின் மாநில முன்னாள் தலைவர் முருகேசன் தெரிவித்தது:
ஒவ்வொரு பணிக்கும் கால அவகாசம் அளிக்க வேண்டும். வறட்சி குறித்த கணக்கெடுப்புப் பணியை உடனடியாக முடிக்குமாறு உயர் அலுவலர்கள் அளித்த நெருக்கடியின் காரணமாகவே இத்தகைய முடிவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
பிற்பகல் பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு வந்த தஞ்சாவூர் கோட்டாட்சியர் சி. சுரேஷை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், வெங்கடேசனின் உறவினர்கள் சூழ்ந்து கொண்டு வெங்கடேசனின் மனைவி இலக்கியாவுக்கு அரசு வேலையும், அவரது குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கோட்டாட்சியர் உறுதியளித்தார். இதையடுத்து, சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com