பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி?

கடுமையான அரசியல் குழப்பங்கள், தொடர் இழுபறிகளுக்குப் பின்னர் எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி?

கடுமையான அரசியல் குழப்பங்கள், தொடர் இழுபறிகளுக்குப் பின்னர் எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்ததையடுத்து, தமிழகத்தின் 21-ஆவது முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றார். இதன்மூலம், திராவிட கட்சிகளில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து, 11 நாள்களாக நிலவி வந்த பெரும் அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணப்பட்டு இயல்பு நிலை திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும்,  
15 நாள்களுக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக் கொண்டதாக ஆளுநரின் செயலர் ரமேஷ்சந்த் மீனா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நாம்பிக்கை வாக்கு கோருவதற்காக சட்டப்பேரவை நாளை 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது.

பேரவை கூடும்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவார். இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவின்படி, பேரவைத் தலைவர் அமைச்சரவைக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை அறிவிப்பார். பேரவையில் பெரும்பான்மையை நிருபித்தபின்னரே புதிய அரசு முழுமையாக செயல்படத் தொடங்கும்.

தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 234 பேர். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமிருக்கிற 233 உறுப்பினர்களில் சபாநாயகர் தவிர்த்து 232 பேர். இவர்களில் பாதிக்கும் மேல் அதாவது குறைந்தபட்சம் 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.

மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பதில், சபையில் இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என நிரூபித்தால் போதுமானது என ஆளுநர் சலுகை வழங்கலாம்.

இதன்படி பேரவையில் 200 உறுப்பினர்கள் இருந்தால் 101 பேரின் ஆதரவு இருந்தால் போதுமானது. 117 பேரின் ஆதரவு தேவையில்லை.

யாருக்கும் பெருலும்பான்மை கிடைக்காவிட்டால் 356 பிரிவின் கீழ் பேரவை கலைக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை 4 முறை ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி இரு முறையும் (1976 ஜனவரி 31, 1991 ஜனவரி 30), எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சி ஒரு முறையும் (1980 பிப்ரவரி 17), ஜானகி தலைமையிலான ஆட்சி ஒரு முறையும் (1988 ஜனவரி 30) கலைக்கப்பட்டது.

- நம்பிக்கை வாக்கெடுப்பு என்றால் என்ன?
ஓர் ஆட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ‌இருக்கிறதா என்ற சந்தேகம் எழும்போது, அதனை நிரூபிப்பதற்கும், தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்கும் அரசியல் சட்டம் வழங்கி இருக்கும் வாய்ப்பே நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நடைமுறை.

- நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஓர் அரசை யார் கோர முடியும்?
ஓர் அரசு பெரும்பான்மை ஆதரவின்றி சட்டப்பேரவையின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதப்படும் நிலையில், அந்த அரசை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி தனது பலத்தை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிடுவார். குறிப்பிட்ட ஒரு பிரச்னையில் ஆளும் அரசு நம்பிக்கையை இழந்துவிட்டதாக கருதினால், அதன் அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம். அதை ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கும் சபாநாயகருக்கு உரிமை உண்டு.

- நம்பிக்கை வாக்கெடுப்பில் யாரெல்லாம் பங்கேற்க முடியும்?
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம்.

- நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதை உறுப்பினர்கள் தவிர்க்க முடியுமா?
சுயேச்சை உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்களாம். அரசியல் கட்சிகள், அக்கட்சியின் கொறடா உத்த‌ரவின்படி வாக்களிப்பார்கள்.

- சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதா?
தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியது ஒரு வாக்கு வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில் சபாநாயகர் ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்கலாம்.

- வெற்றி, தோல்வி முடிவுகளை யார் அறிவிப்பார்கள்?
சபாநாயகரே அறிவிப்பார். விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்?
அதிமுக இரண்டாக உடைந்ததை தொடர்ந்து,  பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து நாளை 18-ஆம் தேதியன்றே பேரவை கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டிருப்பதாக பேரவை செயலாளர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளர்.

பேரவையில் அனைத்து உறுப்பினர்களும் இருக்கைகளில் அமர்ந்த பின்னர், பேரவையின் கதவுகள் மூடப்படும். பேரவை கூடியதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டுவருவார். அதன் மீது அவர் உரையாற்றுவார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.

அவரை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ்வேறு பேரவை கட்சி தலைவர்கள் உரையாற்றி தங்கள் கருத்தை தெரிவிப்பார்கள்.

அதன் பின்னர் அந்த தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் ப.தனபால் உத்தரவிடுவார். 234 உறுப்பினர்களும் ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என ஆறு பிரிவாக அமர வைக்கப்பட்டிருப்பர். ஒவ்வொரு பிரிவினரையும் அரசை ஆதரிப்பவர்களை முதலில் எழுந்து நிற்கச் சொல்வார்கள். அடுத்ததாக எதிர்ப்பவர்களை எழுந்து நிற்கச் சொல்வார்கள். அடுத்தபடியாக நடுநிலை வகிப்பவர்களை எழுந்து நிற்கச் சொல்வார்கள்.
எழுந்து நின்று தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிப்பவர்களின் பெயர்களை குறித்து வைத்து, வாக்குகளாக எண்ணப்படும். ஆறு பிரிவினரும் முடித்த பின், அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும் ஆதரிப்போரின் எண்ணிக்கை கணக்கிடப்படும். 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை முதல்வரின் தீர்மானம் பெற்றிருந்தால், அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக அறிவிக்கப்படும்.

இந்தத் தீர்மானத்தின்போது சபாநாயகர் நடுநிலை வகிக்கவேண்டும். தீர்மானத்துக்கு ஒரு வாக்கு தேவைப்படும்போது மட்டுமே அவர் ஒரு சார்பாக வாக்களிக்க முடியும். அந்த வகையில் வாக்கெடுப்பு நடக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் என்பதால், அவருக்கு முன்னாள் முதல்வர் வரிசையில் இருக்கை ஒதுக்கப்படும். அவருக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தனியாக வேறு இடம் ஒதுக்கப்படுமா? என்பது ஆய்வில் உள்ளது.

ஆனால், பேரவையில் பலப்பரீட்சை நடக்கும்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது கடுமையான எதிர்ப்பை எதிர்தரப்பினர் எந்த வகையிலும் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் ஏற்கனவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே யாரை ஆதரிக்கவேண்டும் என்ற அரசு கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா? என்பது கவனிக்கத் தக்க ஒன்றாக உள்ளது.

ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை சபாநாயகருக்கு முன்கூட்டியே அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் மற்ற எம்.எல்.ஏ.க்கள், ஒருவேளை கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு கொறடா கோரிக்கை விடுக்க முடியும்.

ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலரை கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக இருந்துகொண்டு சசிகலா நீக்கியது செல்லத்தக்கதா? என்ற சட்டரீதியான கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, பேரவையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவை நீதிமன்றம் வரை செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.  

தமிழக சட்டபேரவை உறுப்பினர்கள் விவரம்:
அதிமுக (சசிகலா அணி) 122
அதிமுக (பன்னீர் செல்வம் அணி ) 10
அதிமுக நடுநிலை ( மயிலாப்பூர் நட்ராஜ், நாகை அன்சாரி) - 02
திமுக - 89
காங்கிரஸ் - 08
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் - 01
சபாநாயகர் - 01
காலியிடம் (ஜெயலலிதா மறைவால்) - 01
ஆக மொத்தம் 234

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து 7 எம்.எல்.ஏக்கள் பிரிந்து வந்துவிட்டாலே அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் மனநிலை வேறு மாதிரியாக உள்ளது.

அதாவது எங்கு பெரும்பான்மை உள்ளதோ, அந்தப் பக்கம் எங்கள் ஆதரவை தெரிவிக்கப் போவதாகவும், எம்.எல்.ஏ பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. வரக் கூடிய நாட்களில் எம்.எல்.ஏக்களைத் தக்க வைப்பதே பழனிச்சாமிக்கு பெரும்பாடாக இருக்கும்.

இந்நிலையில், பேரவை கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவதையே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. தேர்தல் வந்தாலும், அதிமுக சிதறிக் கிடப்பதால் பெரும்பாலான இடங்களில் திமுக வென்று ஆட்சியமைக்க முடியும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com