ஹைட்ரோ கார்பன் திட்டம்: தலைவர்கள் கண்டனம்

புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் நீர் வளம், நில வளத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ,
ஹைட்ரோ கார்பன் திட்டம்: தலைவர்கள் கண்டனம்

புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் நீர் வளம், நில வளத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
வைகோ: புதுக்கோட்டை மாவட்டம் -வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (பிப்.15) ஒப்புதல் அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் என்பதும், மீத்தேன் எரிவாயு போன்றதே.
மீத்தேன் எரிவாயு திட்டத்துக்கான அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசும் ஏற்கெனவே அறிவித்துள்ளது. ஆனால், , அதே திட்டத்தை "ஹைட்ரோ கார்பன் திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தும் வகையில் அந்த ஆய்வுக்கான அனுமதியை மத்திய அரசு தற்போது வழங்கியுள்ளது.
இந்த ஆய்வுக்கான உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி: உள்நாட்டில் எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை அதிகரிக்க, நாடு முழுவதும் 69 இடங்களில் சிறிய அளவிலான எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து எரிபொருள்களை எடுப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கத்துடன் உள்நாட்டில் உள்ள எரிபொருள் வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. ஆனால், இதுபோன்ற திட்டங்களால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்து திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகளை அமைத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆபத்தைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தை தவிர, வேறு திட்டங்களைச் செயல்படுத்தக் கூடாது.
தி.வேல்முருகன்: புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீத்தேன் எரிவாயு திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை நாசமாக்கும் எந்தத் திட்டத்தையும் எந்தப் பெயரில் நடைமுறைப்படுத்த முயற்சித்தாலும் தமிழகம் ஒட்டுமொத்தமாக கிளர்ந்தெழுந்து அவற்றைத் தடுத்து நிறுத்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com