பழனிசாமியா? பன்னீர்செல்வமா? முடிவு செய்வது ஒன்பது வாக்குகள்தான்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா? முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமா? என்பதை முடிவு செய்வது பேரவை உறுப்பினர்களின் 9 வாக்குகள்தான்
பழனிசாமியா? பன்னீர்செல்வமா? முடிவு செய்வது ஒன்பது வாக்குகள்தான்...

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியா? முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமா? என்பதை முடிவு செய்வது பேரவை உறுப்பினர்களின் 9 வாக்குகள்தான் தமிழகத்தின் தற்போதைய அரசியலில் நிலவிவரும் பரபரப்புக்கு முடிவு தெரிவிக்கக்கூடியவை.

சசிகலா முதல்வராக எடுத்த முயற்சிகளுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர் குரல் எழுப்பியதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவிவந்தது. இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டதால், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமான எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்மொழிந்தார். இதையடுத்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றதை அடுத்து தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டு வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது.

15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிருபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கூவத்தூர் தனியார் நட்சத்தி விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்கள் மனது மாறுவதற்கு முன்பாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்ட எடப்பாடி பழனிச்சாமி, இன்று சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார். இதையடுத்து இன்று 11 மணிக்கு சிறப்பு பேரவை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருகிறார். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி, மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பேசுவார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, குறைந்தது, 117 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஏறத்தாழ 9 எம்.எல்.ஏக்கள் அளிக்கும் முடிவை வைத்துதான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடருமா இல்லையா என்பது முடிவாகும் என்பதால் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழக பேரவையின் மொத்த இடங்கள் 235 ஆகும். ஆர்.கே.நகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மறைந்துவிட்டதால் தற்போது பேரவை பலம் 234 உறுப்பினர்கள் என்ற அளவில் உள்ளது. எனவே, இதில் பாதிக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெறுபவரே முதல்வராக இருக்க முடியும். அதன்படி, குறைந்தபட்சமாக 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவை.

பேரவையில் அதிமுகவுக்கு தற்போது சபாநாயகர் தனபாலையும் சேர்த்து 135 உறுப்பினர்கள் பலம் உள்ளது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 124 எம்.எல்.ஏக்கள் (சபாநாயகரை தவிர்த்து) ஆதரவு இருப்பதாக அவர் ஆளுநரிடம் பட்டியல் அளித்திருந்தார். பன்னீர்செல்வம் அணியில் அவர் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் (சபாநாயகரை தவிர்த்து) உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்து குறைந்தது 7 எம்.எல்.ஏக்கள் அவருக்கு எதிராக திரும்பினாலும் ஆட்சி கலைய வாய்ப்புள்ளது.

ஆனால், ஒருவேளை ஒரு ஓட்டு வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலை ஏற்படுமானால் அப்போது சபாநாயகர் தனது வாக்கை பதிவு செய்யலாம். அவர் அரசுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்கை பதிவு செய்ய முடியும். இப்போதுள்ள சபாநாயகர் தனபால், எடப்பாடி பழனிசாமி ஆதரவு பிரிவைச் சேர்ந்தவர் என கூறப்படுவதால் அவர் அரசை ஆதரித்தே வாக்களிப்பார் என எதிர்பார்க்கலாம்.

சபாநாயகர் வாக்களித்தும் கூட அரசை காப்பாற்ற இன்னொரு வாக்கு தேவைப்படுமானால், நியமன உறுப்பினர் (ஆங்கிலோ இந்தியன்) நான்சி ஆன் சிந்தியா பிரான்சிசை வாக்களிக்க சபாநாயகர் உத்தரவிட முடியும். பொதுவாக நியமன உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பதில்லை என்றாலும், சபாநாயகர் நினைத்தால் அதை செய்ய உத்தரவிட முடியும்.

கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அப்போதைய சபாநாயகர் போப்பையா இதேபோன்ற ஒரு முடிவை எடுத்து அரசை காப்பாற்றியது வரலாறு. எனவே, இவ்விருவர் வாக்குகளையும் எடுத்து பார்த்தால் 9 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆட்சி நீடித்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் பழனிசாமி தரப்பில் இருந்த கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறி தனது இல்லத்திற்கு திரும்பியுள்ளார்.

117 எம்.எல்.ஏ.,க்கள் தீர்மானத்தை ஆதரித்தால், அரசு பெரும்பான்மையை நிரூபித்ததாக அறிவிக்கப்படும். எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, 28 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1988-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com