பெயரை மாற்றுக; ஜெயலலிதா படத்தை அகற்றுக: ஸ்டாலின் புகார்

ஜெயலலிதா பெயரில் உள்ள திட்டங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும், ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பெயரை மாற்றுக; ஜெயலலிதா படத்தை அகற்றுக: ஸ்டாலின் புகார்


சென்னை: ஜெயலலிதா பெயரில் உள்ள திட்டங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும், ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டிருப்பதால், ஜெயலலிதாவின் பெயரில் இருக்கும் திட்டங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும், அவரது படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை நேரில் சந்தித்து ஆதாரங்களுடன் கடிதம் அளித்தார்.

அக்கடிதத்தில், சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு   நீதிமன்றம்    அளித்த     தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அந்த தீர்ப்பிலேயே பொது ஊழியராக இருந்த முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் கூட்டுச்சதி செய்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பிற்கு பிறகும், "ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழாவில் 69 லட்சம் மரம் நடும் திட்டத்தை அறிவித்து, அதை முதலமைச்சர் துவங்கி வைத்து, அந்த விழாவில் தலைமைச் செயலாளராகிய தாங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் பங்கேற்று இருப்பது அரசு நிர்வாகம் பற்றி வாக்களித்த மக்களுக்கு தவறான செய்தியை சொல்லியிருக்கிறது.

அதேபோல் அவரது படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பது, அரசு விழாக்களில் இடம் பெறச் செய்வது, அவர் பெயரில் அரசு திட்டங்களை செயல்படுத்துவது எல்லாமே பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை என்ற கோட்பாட்டிற்கு முற்றிலும் மாறாகவும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே உதாசீனப்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது.

மேலும், ஜெயலலிதா பெயரில் தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களில் முக்கியமாக,
அம்மா உணவகம்
அம்மா குடிநீர்
அம்மா உப்பு
அம்மா மருந்தகம்
அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்
அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்
அம்மா ஆரோக்கிய திட்டம்
அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்
அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்
அம்மா திரையரங்கம்
அம்மா காய்கறி கடை
அம்மா தங்கும் விடுதிகள்
அம்மா விதைகள்
அம்மா சிமெண்ட்
அம்மா சிறு வணிக கடன் திட்டம்
அம்மா பூங்காக்கள்
அம்மா உடற்பயிற்சி நிலையம்
அம்மா கைபேசி திட்டம்
அம்மா குடை வழங்கும் திட்டம்
அம்மா பணி பாராட்டும் திட்டம்
அம்மா இலக்கிய விருது
அம்மா மாணவர் ஊக்குவிப்புத் திட்டம்
அம்மா அரசுப் பணித் திட்டம்
அம்மா வேலைவாய்ப்புத் திறன் மற்றும் பயிற்சித் திட்டம்
அம்மா அழைப்பு மையம்

அம்மா இருசக்கர வாகன திட்டம் என இன்னும் அவர் பெயரில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்கள் அனைத்திற்கும் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி அவரது படங்களை சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், அமைச்சர் அலுவலங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விழாக்களில் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று உடனடியாக அரசு ஆணை வெளியிட வேண்டும். அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழிப்பிற்கு ஊக்கம் அளிக்கும் விதத்திலும், மாநில அரசு நிர்வாகம் மேம்படும் விதத்திலும், பொது ஊழியர்கள் வருங்கால தலைமுறைக்கும், இன்றைய இளைஞர்களுக்கும் முன்னுதாரணாக திகழும் விதத்தில் அவரது புகழ் பரப்பும் செயல்களை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com