மூத்த முன்னாள் எம்எல்ஏவுக்கு போலீஸார் செய்த கெடுபிடி

மூத்த முன்னாள் எம்எல்ஏவுக்கு போலீஸார் செய்த கெடுபிடி

திருவண்ணாமலை: 

திருவண்ணாமலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியைச் சந்திக்க வந்த அவரது நண்பரும், அதிமுக மூத்த முன்னாள் எம்எல்ஏவுமான ஆரணி ஜெமினி ராமச்சந்திரனிடம் போலீஸார் செய்த கெடுபிடி அதிமுகவினரை மனம் நோகச் செய்தது.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, சனிக்கிழமை பகல் திருவண்ணாமலைக்கு வந்தார்.

திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் மாளிகைக்குள் சென்ற அவரைச் சந்திக்க அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் சென்றனர். அப்போது, நடக்கக்கூட முடியாத, வயதான முதியவர் ஒருவர் அதிமுக கட்சியின் துண்டை தோளில் போட்டுக்கொண்டு நூற்றாண்டு விழா அழைப்பிதழ் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு விருந்தினர் மாளிகைக்குள் செல்ல முயன்றனர்.

நுழைவு வாயிலில் இருந்த போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தினர். உடனே, முதியவருடன் வந்திருந்த சிலர் நுற்றாண்டு விழா அழைப்பிதழை போலீஸாரிடம் காண்பித்து, இந்த முதியவர் ஆரணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெமினி ராமச்சந்திரன். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் எம்எல்ஏவாக இருந்தவர். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பரிட்சயமானவர்.

ஆரணி நகரச் செயலாளராக இருந்தவர். இப்போது, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருக்கிறார் என்று விளக்கினர். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட போலீஸார், எல்லாம் சரி. யாராக இருந்தாலும் உள்ளே அனுப்ப முடியாது என்று கூறினர்.

இதைக் கேட்ட ஜெமினி ராமச்சந்திரன், ஐயா... நான் எம்எல்ஏவாக இருந்தபோது முதல்வர் எடப்பாடியும் எம்எல்ஏவாக இருந்தார். அவர் என்னுடைய நண்பர். ஓரிரு நிமிடங்கள் அனுமதி கொடுத்தால் பார்த்துவிட்டு சென்று விடுகிறேன் என்றார்.

அப்போதும் போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வெயிலில் நீண்ட நேரமாக நுழைவு வாயிலேயே நின்றிருந்த ஜெமினி ராமச்சந்திரன், என்னால் நிற்க முடியவில்லை. தயவு செய்து உள்ளே அனுப்பி வையுங்கள். இல்லாவிட்டால் நிழலில் அமர இடம் கொடுங்கள் என்று கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சினார். இதன்பிறகு சற்று மனமிறங்கிய போலீஸார் வாக்கி டாக்கியில் தகவல் கொடுத்தனர்.

ஆனால், எதிர்முனையில் இருந்து பேசிய காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளே அனுப்ப வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் மனமுடைந்த ஜெமினி ராமச்சந்திரன் நீண்ட நேரமாக வாசலிலேயே காத்திருந்து அவதிப்பட்டார். சுமார் 30 நிமிட போராட்டத்துக்குப் பிறகு விருந்தினர் மாளிகைக்கு உள்ளே ஒரு ஓரமாக அமர போலீஸார் அனுமதி கொடுத்தனர்.

காவல்துறையினரின் இந்த கெடுபிடி சம்பவங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அதிமுகவினரும், பொதுமக்களும் மக்களால் நான்... மக்களுக்காகவே நான்... என்று வாழ்ந்த ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த எம்எல்ஏவுக்கே... இந்த கதியா..? என்று உச் கொட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com