வைகோ கைது வஞ்சகச் செயல்: வேல்முருகன் கண்டனம்

மலேசியாவில் வைகோவை கைது செய்தது கோழைத்தனமான வஞ்சகச் செயல் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
வைகோ கைது வஞ்சகச் செயல்: வேல்முருகன் கண்டனம்

சென்னை: மலேசியாவில் வைகோவை கைது செய்தது கோழைத்தனமான வஞ்சகச் செயல் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"மலேசியாவுக்குச் சென்ற வைகோ அங்கே கைது செய்யப்பட்டிருக்கிறார். விமான நிலையத்திலேயே மடக்கி கைது செய்து பின்பு விடுவித்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் முறையாக கடவுச்சீட்டு மற்றும் விசாவுடன் போனவரைத்தான் அங்கே கைது செய்து பின்பு விடுவித்திருக்கிறார்கள். அவர் மலேசியா செல்ல இந்திய அரசும் அதன் வெளியுறவுத் துறையும் ஆட்சேபிக்கவில்லை. இந்திய அரசின் முழு சம்மதத்தின், அனுமதியின் பேரிலேயே மலேசியா சென்றார்.

அங்கு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அவர்களின் மகள் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த வாரமே சென்னையிலுள்ள மலேசியத் தூதரகத்தில் விண்ணப்பித்து விசாவும் பெற்றிருந்தார்.

8-ம் தேதி வியாழன் நள்ளிரவு 12 மணி அளவில் தனது செயலர் அருணகிரியுடன் புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கோலாலம்பூர்
விமான நிலையம் சென்றடைந்தார்.

அங்கு தயாராய் இருந்த குடிவரவு அதிகாரிகள், “மலேசியாவின் ஆபத்தானவர்கள் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதால் இங்கு நுழைய தங்களுக்கு தடை உள்ளது” என்று சொல்லி வைகோவின் கடவுச்சீட்டைப் பறித்துக் கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தில் அவரை சிறை வைத்தனர்.

அத்தோடு “தாங்கள் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்” என்றும் “இலங்கையில் தங்கள் மேல் பல வழக்குகள் உள்ளன” என்றும் சொல்லி விடுதலைப் புலிகள் தொடர்பாக கேள்விகளும் கேட்டிருக்கிறார் மலேசிய குடிஉறவு உயரதிகாரி.

அதற்கு வைகோ "நான் இலங்கையைச் சேர்ந்தவன் இல்லை; நான் இந்தியக் குடிமகன்; அது என் கடவுச்சீட்டிலேயே இருக்கிறதே” என்றார். ஆனால் குடிஉறவு அதிகாரிகள் அதை ஏற்கவில்லை.

தனக்கு நேர்ந்ததை வைகோ பேராசிரியர் ராமசாமிக்குத் தெரியப்படுத்தினார். அவரும் பினாங்கு முதல்வர் லிம் குவான் யங் அவர்களும் உடனடியாக அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அதனையும் அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்; மலேசியத் துணைப் பிரமரிடமிருந்தே வைகோவைக் கைது செய்ய தங்களுக்கு உத்தரவு வந்ததாகத் தெரிவித்தனர்.

வைகோவின் இந்தக் கைதுக்கு மலேசிய அதிகாரிகள் கூறிய காரணம், அந்த நாட்டுச் சட்டப்படி மட்டுமல்ல; உலகின் எந்த நாட்டுச் சட்டப்படியும் செல்லுபடியாகாது என்பது சிறு பிள்ளைக்குக்கூட தெரியும். இருந்தும் பன்னாட்டுச் சட்ட விதிகளுக்கே புறம்பாக, மனித உரிமை மீறல் குற்றத்தையே புரிந்திருக்கிறது மலேசிய அரசு.

இதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு வைகோவுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் வைகோவின் கைதைக் கண்டித்து, மத்திய அரசை இதில் தலையிட வலியுறுத்தினர்.

அதே நேரம் மத்திய இணை அமைச்சரும் பாஜக தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் “வைகோ கைதுக்கும் நடுவண் அரசுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை” என்று செய்தியாளர்களிடம் சொன்னார்.

வைகோ கைதைக் கண்டிக்காதவர், தொடர்பே இல்லாமல் இவ்வாறு பேசியது “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” கதையையே நினைவுபடுத்தியது.

இதற்கு முன் எத்தனையோ முறை வைகோ மலேசியாவுக்குச் சென்றிருக்கிறார். அப்போதெல்லாம் அவரை எதுவும் செய்ததில்லை அந்த அரசு. அப்படியிருக்க, இப்போது ஏன் என்பதுதான் இமயமாய் உயரும் கேள்வி. வைகோ கைதை மலேசிய அரசு தானாகவே செய்திருக்கும் என்று நம்ப இனமானமுள்ள தமிழர்கள் இங்கு யாருமில்லை.

இனப்படுகொலை செய்த ராஜபக்சே இலங்கையில் அதிபராக இருந்து, அதுசமயம் மன்மோகன் சிங் இங்கே பிரதமராக இருந்தபோதுகூட, மலேசியா சென்ற வைகோவுக்கு இவ்விதக் கொடுமை நேரவில்லை.

ஆனால், இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனாவும் இந்தியப் பிரதமராக நரேந்திர தாமோதர தாஸ் மோடியும் இருக்கும்போதுதான் மலேசியாவில் வைகோ கைது செய்யப்பட்டிருக்கிறார்.

2006 ஆம் ஆண்டில் புலிகளை ஆதரித்துப் பேசினார் என்று போட்ட வழக்கில் 2017-இல் அண்மையில் சிறைக்குப் போன வைகோவை நீதிபதியே தன் சொந்த ஜாமீனில் வெளியே அனுப்பினார்.

அன்றும் சரி, இன்றும் சரி, என்றுமே, எங்குமே அவர் புலிகளை ஆதரிப்பதை மறுத்ததும் இல்லை, மறைத்ததும் இல்லை. தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போர் தொடங்கிய காலம் தொட்டே அவர் புலிகளை ஆதரித்து வருகிறார். அதுதான் அவரது முதன்மைக் கொள்கை.

புலிகள் ஆதரவிற்காக அவரை கைது செய்வதென்றால் அவர் வெளியிலேயே இருக்க முடியாது; எல்லா நாட்களும் சிறைக்குள்தான் இருக்க வேண்டும். அதற்கெல்லாம் பயந்தவரில்லை வைகோ

அத்தகைய ஒரு மனிதரை நேரடியாக இல்லாமல் இப்படி வஞ்சகமாகக் கைது செய்ய, உண்மையும் உறுதியும் நேர்மையும் நன்னடையும் இல்லாதவருக்குத்தான் புத்தி போகும்.

அப்படிப்பட்ட யாரோ தொடைநடுங்கி, கடைந்தெடுத்த மகா கோழைதான் இலங்கையுடன் சேர்ந்து மலேசியாவின் துணைப் பிரதமரை வசப்படுத்தி வைகோவைக் கைது செய்ய வைத்திருக்கிறான். இதற்கு மலேசிய குடிஉறவு உயரதிகாரி வைகோவிடம் கேட்ட கேள்விகளே சாட்சி!

தமிழின அழிப்பைத் தொடரும் தமிழ்ப் பகைவர்களின் எண்ணிலடங்கா கொடுஞ்செயல்களில் ஒன்றுதான் மலேசியாவில் வைகோ கைது செய்யப்பட்டதும்.

நேருக்கு நேர் நிற்க தைரியம் இல்லாமல் புழக்கடை வழியாக அழிவு வேலை செய்தவதையே வழக்கமாகக் கொண்ட இந்த வக்கிரப் புத்திக்காரர்களின் வெறியாட்டம் முடிவுக்கு நாள் வெகுதொலைவில் இல்லை.

அவர்களை எதிர்கொண்டு முறியடிக்க, எம் தமிழக மக்களை ஓரணியில் திரளுமாறு அறைகூவி அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com