பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் நிர்ணய முறைக்கு எதிராக வழக்கு: பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மதிப்பெண் நிர்ணயம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க சென்னை

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் மதிப்பெண் நிர்ணயம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரும் மனுவுக்கு பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: 
தமிழக அரசு கடந்த மே மாதம் வெளியிட்ட அரசு ஆணையில் 2017-18-ஆம் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் கடந்த ஆக.9ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 50-இன் படி மொழிப்பாடம் மற்றும் செய்முறைத்தேர்வுகள் அல்லாத பாடங்களில் 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்களாகவும், 90 மதிப்பெண்கள் தேர்வு அடிப்படையிலும் வழங்கப்படும். 90 மதிப்பெண்களில் தேர்ச்சி பெற 25 மதிப்பெண்களைப் பெற வேண்டும். 
செய்முறைத் தேர்வு கொண்ட பாடங்களில் 70 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற 15 மதிப்பெண்களைப் பெற வேண்டும். செய்முறைத் தேர்வுகளை கட்டாயம் செய்ய வேண்டும். 
தொழில் சார்ந்த பிரிவுகளில், செய்முறைத் தேர்வுகளில் 75 மதிப்பெண்களுக்கு 20 மதிப்பெண்களைப் பெற வேண்டும். செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகளை சேர்த்து மொத்தம் 35 மதிப்பெண்கள் தேர்ச்சி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற செய்முறைத் தேர்வை கொண்ட மாணவர்கள் 21.47 சதவீத மதிப்பெண்களையும், செய்முறைத் தேர்வல்லாத மாணவர்கள் 27.77 சதவீத மதிப்பெண்களையும் பெற வேண்டியுள்ளது. இதில் 6.3 சதவீத மதிப்பெண் வித்தியாசம் உள்ளது. இதனால் செய்முறை தேர்வற்ற மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 
அகமதிப்பீட்டு முறையை பொறுத்தவரை செய்முறை தேர்வற்ற மாணவர்களுக்கு 10 மதிப்பெண்ணும், தொழில் பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு 25 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. இதுபோல மதிப்பெண்கள் வழங்குவதிலும், தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிப்பதிலும் பாகுபாடு காட்டுவது சட்ட விரோதமானது. 
ஆகவே, மதிப்பெண் வழங்குவதில் பாகுபாடு காட்டும் அரசாணை எண் 50-ஐ ரத்து செய்யவும், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான அகமதிப்பெண் மதிப்பெண் வழங்கும் முறையை பின்பற்றவும், தேர்ச்சி மதிப்பெண்களை நிர்ணயிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஜே.அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பள்ளிக்கல்வித் துறைச் செயலர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், அரசுத்தேர்வுகள் துறை இயக்குநர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை நவ.7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com