வளர்ச்சியில் பின்தங்கும் சென்னை துறைமுகம் 

வளர்ச்சியில் பின்தங்கும் சென்னை துறைமுகம் 

நாட்டின் பழமையான துறைமுகங்களில் ஒன்றான சென்னைத் துறைமுகம் நீதிமன்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாக வருவாய் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் கடும் பாதிப்பு ஏற்படும்

திருவொற்றியூர்: நாட்டின் பழமையான துறைமுகங்களில் ஒன்றான சென்னைத் துறைமுகம் நீதிமன்ற வழக்குகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாக வருவாய் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் கப்பல்த்துறை அமைச்சகத்தின் கீழ் 12 பெருந்துறைமுகங்கள் உள்ளன. இதில் 135 ஆண்டுகளைக் கடந்த சென்னத் துறைமுகமும் ஒன்றாகும். இங்கு பாரதி, ஜவஹர், டாக்டர் அம்பேத்கர் மூன்று கப்பல் துறைகள் உள்ளன. இதில் 24 கப்பல்தளங்கள்  உள்ளன. துபாய், சிங்கப்பூர் துறைமுகங்களால் நிர்வகிக்கப்படும் இரண்டு சரக்குப் பெட்ட முனையங்கள் உள்ளன. சுமார் 20 ஆயிரம் பேர் பணியாற்றிய இத்துறைமுகத்தில் தற்போது சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாகக் கருதப்படும் இத்துறைமுகத்திற்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்ட எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி, கிருஷ்ணபட்டனம் ஆகிய துறைமுகங்களின் வளர்ச்சியால் இருப்பதைத் தக்கவைக்கவே கடும் சிரமங்களை சென்னைத் துறைமுகம் சந்தித்து வருகிறது. ஆண்டுக்கு சுமார் 65 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்ட இத்துறைமுகம் கடந்த இரு ஆண்டுகளாக சுமார் 50 மில்லியன் டன் சரக்குகளை எட்டவே போராடுகிறது. நடப்பாண்டில் இந்த அளவையாவது எட்டுமா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் துறைமுகத்திற்கு வெளியே சாலைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் இருந்த வரும் நிலையில் துறைமுகத்தின் உள்ளேயும் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு நீதிமன்றங்களில் தேக்க நிலையில் இருந்து வரும் பல்வேறு வழக்குகள் காரணமாக உள்ளன என்பது தெரியவந்துள்ளது. 
நிலக்கரி, இரும்புத்தாது கையாளத் தடை வழக்கு: நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வது சென்னைத் துறைமுகத்தின் முக்கிய வருவாயாக இருந்து வந்த நிலையில் மாசுபடுதலால் சென்னை மாநகரத்தின் முக்கிய பகுதிகளான தலைமைச் செயலகம், பாரிமுனை, வடசென்னையின் முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளில் சுமார் 9 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு 2011-ம் ஆண்டு மே மாதம் நிலக்கரி, இரும்புத்தாதுவைக் கையாள நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து சென்னைத் துறைமுகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் பல்வேறு கட்ட விசாரணையைக் கடந்து நிலக்கரி கையாளும்போது வெளியேறும் மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் இதற்கென நிபுணர் குழுவையும் அமைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த கால அவகாசம் கோரியது சென்னைத் துறைமுகம். இந்நிலையில் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் என்ன? மாசுபடுதலைக் கட்டுப்படுத்த செயல்படுத்திய திட்டங்கள் என்ன? என்பதெல்லாம் இன்றுவரை சிதம்பர ரகசியமாகவே இருந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பும் இன்றுவரை வெளியாகவில்லை. ஆண்டுக்கு சுமார் 20 மில்லியன் டன் நிலக்கரி, இரும்புத்தாது கையாளப்பட்ட இத்துறைமுகத்தில் இதற்கென பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இவைகளில் ஒரு சில வசதிகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டாலும் பெரும்பாலானவை பயனற்ற நிலையில்தான் உள்ளன. 
ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்ட தானியங்கி நிலக்கரி கன்வேயர்: கப்பலிலிருந்து நிலக்கரியை இறக்கி சேமிப்பு கிடங்கிற்கு லாரிகளில் கொண்டு செல்வதால் அதிக அளவிலான மாசு ஏற்படுகிறது என்பதால் நிலக்கரியை நேரடியாக எடுத்துச் செல்லும் வகையில் ரூ. 39 கோடி செலவில் தானியங்கி கன்வேயர் நவ.2009 -ல் கட்டமைக்கப்பட்டது. தனியார் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்ட இக்கன்வேயர் செயல்பாட்டிற்கு வந்து சோதனை ஓட்டம் கூட வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. ஆனால் அதற்குரிய கட்டணத் தொகை முழுவதும் பட்டுவாடா செய்யப்பட்டது. இதனையடுத்து இதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து 2011-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இதற்கிடையே இதனை பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் இறந்து போனார். வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுமார் 6 ஆண்டுகளைக் கடந்தும் இவ்வழக்கு முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தாணே, வர்தா உள்ளிட்ட புயல் தாக்குதல்களின்போது தானியங்கி கன்வேயரின் பெருமளவு கட்டமைப்புகள் சரிந்து விழுந்துவிட்டன. இருப்பினும் இன்று வரை சி.பி.ஐ. வழக்குகளுக்குப் பயந்து எந்த அதிகாரியும் இதனை அகற்ற முன்வரவில்லை. மேலும் இருப்பு வைக்க ஏற்படுத்தப்பட்ட கூரை வேய்ந்த கூடம் எலும்புக் கூடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. 
இரும்புத் தாது விற்பனையில் முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்றத் தடை உத்தரவு காரணமாக இரும்புத்தாது கையாளப்படுவது கடந்த 2011-ம் ஆண்டே நிறுத்தப்பட்ட நிலையில் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் 1.32 லட்சம் டன் இரும்புத் தாதுவை கழிவு எனக் கணக்கிட்டு மொத்தமாக ஒரு டன் ரூ.787 என்ற விலையில் சுமார் ரூ.10 கோடிக்கு ஏலம் மூலம் விற்பனை செய்துவிட்டனர். ஆனால் இதன் உண்மையான மதிப்பு ரூ. 40 கோடிவரை இருக்கும் எனத் தெரியவந்தது. கூட்டுச் சதியின் மூலம் ஏல விற்பனை நடைபெற்றிருப்பது குறித்து கடந்த மார்ச் 20, தினமணியில் செய்தி வெளியானது. இதனையடுத்து உரிய விசாரணை நடத்த கப்பல்த் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதன்பேரில் துறைமுக கண்காணிப்புத் துறை  நடத்திய விசாரணையில் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. மேற்கொண்டு இரும்புத்தாதுவை எடுத்துச் செல்ல தடையும் விதிக்கப்பட்டது. மேலும் உரிய நடவடிக்கைகளுக்காக இவ்வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூன் 14-ம் தேதி ஐந்து துறைமுக அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இதற்கிடையே 1.32 லட்சம் இரும்புத் தாதுவில் சுமார் 40 ஆயிரம் டன் தடைக்கு முன்னதாகவே எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. தற்போது 6 மாதங்களைக் கடந்துவிட்ட பிறகும் சி.பி.ஐ. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கீழ்நிலை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ. இதன் பின்னணியில் செயல்பட்ட முக்கிய சக்திகளை நெருங்கமுடியாதது ஏன்?. மேலும் தற்போது இருப்பு வைக்கப்பட்டள்ள இடம் துறைமுகத்தின் பயன்பாட்டில் இல்லாததால் இதனால் ஏற்படும் நட்டமும் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு இடையூறாகவே இருக்கும் என்பதே உண்மை.
அமைச்சர் நிதின் கட்கரி தலையிடக் கோரிக்கை: சென்னைக்கு அருகாமையில் புதிய துறைமுகங்கள் அமைக்கப்பட்டாலும் சென்னைத் துறைமுகத்தின் மீதான ஈர்ப்பு பலருக்கும் குறையவில்லை என்பது உண்மை. கட்டமைப்பு வசதிகள் முறையாக இல்லாத நிலையிலும் தினமும் சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு லாரிகள் வரிசையில் காத்திருப்பதன் மூலம் இதனை உணர முடியும். எனவே சென்னைத் துறைமுகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் உரிய காலத்திற்கு தீர்க்கப்பட வேண்டும். மேலும் முக்கிய வழக்குகளில் சாதகமோ அல்லது பாதகமோ ஒரு முடிவினை விரைவாக எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தடைக்கற்களாக குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி பொலிவு மிகுந்த துறைமுக மாற்ற கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தைச் சேர்ந்த இத்துறையின் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறப்பு ஆலோசனை நடத்தி தீர்வு காண வேண்டும். நாட்டின் பழமையான துறைமுகம் நவீன காலத்திற்கேற்ப கட்டமைக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com