உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு தனி இணையதளம்: முன்பதிவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கென தனி இணையதளம் தொடங்கப்பட்டு அதில் பங்கேற்பாளர்கள் பதிவிட


சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கென தனி இணையதளம் தொடங்கப்பட்டு அதில் பங்கேற்பாளர்கள் பதிவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெற இன்னும் 30 நாள்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், அரசின் சார்பில் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இரண்டு நாள்கள் மிகப் பிரமாண்டமான முறையில் மாநாடு நடந்தது. இம்மாநாட்டின் வழியாக, ரூ.2.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்ற மாநாட்டில் 100-க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இம்மாநாட்டில் பேசிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கிணங்க வரும் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.
பல்வேறு தலைப்புகளில் விவாதம்: இரண்டு நாள்களிலும் தொழில் துறை தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறவுள்ளன. தொடக்க விழாவைத் தொடர்ந்து, முதல்வர், அமைச்சர்களுடன் தொழில் அதிபர்கள் சந்தித்துப் பேச்சு, கருத்தரங்குகள், பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகளின் ஆலோசனைகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் துறையினரின் உரைகள் என பல்வேறு முக்கிய அம்சங்களுடன் இரண்டு நாள்கள் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 24-ஆம் தேதி மாலை நிறைவு விழா நடைபெறுகிறது.
இணையதளத்திலேயே முன்பதிவு: உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான விவரங்களை அவ்வப்போது அறிந்து கொள்ள தனி இணையதளம் (www.tngim.com)  தொடங்கப்பட்டுள்ளது. அதில், விவரங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன. மாநாட்டில் அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, இணையதளத்திலேயே முன்பதிவு செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநாட்டின் நோக்கம், தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பன போன்ற பல்வேறு விவரங்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. 
கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டு இணையதளம் முழு அளவிலான பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com