48 மணி நேர தீவிர சிகிச்சைக்குப் பின் தாயுடன் சேர்ந்த குட்டி யானை

உடல் நலக்குறைவால் உயிருக்குப் போராடிய யானைக் குட்டி 48 மணி நேர தீவிர சிகிச்சைக்குப் பின் மீண்டும் தாயுடன் சேர்ந்ததால் வனத் துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
48 மணி நேர தீவிர சிகிச்சைக்குப் பின் தாயுடன் சேர்ந்த குட்டி யானை

உடல் நலக்குறைவால் உயிருக்குப் போராடிய யானைக் குட்டி 48 மணி நேர தீவிர சிகிச்சைக்குப் பின் மீண்டும் தாயுடன் சேர்ந்ததால் வனத் துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கரளையம் காப்புக்காடு, காக்கரைகுட்டையை ஒட்டியுள்ள ஈஸ்வரன் என்பவரின் சோளக்காட்டில் ஒன்றரை வயதுள்ள ஆண் யானைக் குட்டி நோயால் அவதியுற்று கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் யானைக் குட்டியை மீட்டு சிகிச்சை அளிக்க முயன்றபோது அதனருகே தாய் யானை நின்று கொண்டிருந்தது.
குட்டியைக் காப்பாற்ற தாய் பலமுறை முயன்றும் பலனளிக்காததால் வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. அதைத் தொடர்ந்து, உயிருக்குப் போராடிய யானைக் குட்டியை மீட்டு கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். வெயில் நிலவியதால் குட்டிக்கு தண்ணீர்த் தெளித்து குளிர்ச்சி ஏற்படுத்தி, திரவ உணவுகள் வழங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சைக்குப் பின் யானைக் குட்டி எழுந்து நின்று சற்று நகர்ந்தது. ஆனால், உடல் சோர்வு காரணமாக மீண்டும் படுத்துவிட்டது. இரவு நேரத்தில் குட்டிக்கு சிகிச்சை தொடர வேண்டும் என்பதால் காட்டில் தீ மூட்டி தாய் யானை வராதபடி வனத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் யானைக் குட்டிக்கு போதிய வெப்பசூழல் இல்லாததால் குட்டியின் அருகேயே தீ மூட்டி அதன் உடலில் சூடேற்றி சிகிச்சை அளித்தனர். விடிய விடிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, யானைக் குட்டிக்கு உயிர் காக்கும் மருந்துகள் மூலம் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பின் வாயில் ஏற்பட்ட காயத்தின் தாக்கம் குறைந்ததால் யானைக் குட்டி வாழைப் பழம் சாப்பிட்டது. தொடர்ந்து, 5 லிட்டர் தண்ணீர் குடித்ததால் யானைக் குட்டியின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெற்றது. யானை எழுந்து மெல்ல மெல்ல நடந்து 3 கி.மீ. தூரத்தில் காத்திருந்த தாய் யானையுடன் இணைந்தது. 48 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தாயுடன் குட்டி சேர்ந்தது வனத் துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com