பெற்றோருக்கும் சேர்த்து காப்பீடு தேவை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்தார்.
பெற்றோருக்கும் சேர்த்து காப்பீடு தேவை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்தார்.

இத்திட்டத்தின்படி விபத்தால் உயிரிழக்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1லட்சமும், பலத்த காயமடையும் மாணவர்களுக்கு ரூ.50ஆயிரமும், காயமடைந்த மாணவர்களுக்கு ரூ.25ஆயிரமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். அதுவும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்துக்கு 48 மணி நேரத்துக்குள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மாணவர்களுக்கான இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டம் வரவேற்புக்குரியதே. இருப்பினும் இத்திட்டத்தில் கூடுதலாக மாணவர்களின் பெற்றோருக்கும் காப்பீட்டை சேர்த்து வழங்கினால் அதன் மூலம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தற்போதுகூட, தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், கல்லூரிகள் சில தங்கள் மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு பாலிசி எடுத்துள்ளனர். அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் எடுத்துள்ள இந்த காப்பீட்டுத் திட்டத்தின்படி, மாணவர்கள், அவர்களது பெற்றோரில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு காப்பீடு கிடைக்கும். ஆனால் இத்தகைய பாலிசிகள் மாணவர்களது தனி பெயரில் இல்லாமல், ஒட்டுமொத்தமாக பள்ளி, கல்லூரிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே பாலிசியாக வழங்கப்படுவதால், சூழ்நிலை காரணமாக ஒரு மாணவர் ஒரு பள்ளியிலிருந்து இடையில் வேறு பள்ளிக்கு மாறி செல்லும் நிலை ஏற்பட்டால் அந்த மாணவருக்கு காப்பீட்டுத் திட்டம் பயன் இல்லாமல் போய்விடுகிறது. 

இதுபோன்ற விஷயங்கள் பாதிக்காத வகையில், தமிழக அரசு அறிவித்துள்ள விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பயனளிக்கும் வகையில், அவர்களது அடையாள எண்ணை (எமீஸ் எண்) ஆதாரமாக கொண்டு, தனித்தனியே பாலிசி வழங்க வேண்டும். மாணவர்களது எமீஸ் எண் மேல்நிலைக் கல்வி வரை ஒருபோதும் மாறாது என்பதாலும், அதில் மாணவர்களது போட்டோ உள்பட அனைத்து விவரங்களும் அடங்கியிருப்பதாலும், அவர்கள் இடையில் வேறு பள்ளிக்கு மாறிச் சென்றாலும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற முடியும். 

மேலும், இத்திட்டத்தின்படி விபத்தில் மாணவர்கள் இறந்தால் அவர்களது குடும்பம்தான் இழப்பீட்டுத்தொகை பெறும் வகையில் உள்ளது. இத்திட்டத்தில் மாணவர்களின் பெற்றோரையும் இணைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் தாய், தந்தையரில் வருமானம் ஈட்டுபவர் இறந்துவிட்டால், அந்த குடும்பத்தால் மாணவரை தொடர்ந்து படிக்க வைக்க இயலாது. 

இதுபோன்ற சூழ்நிலைகளில் பெற்றோர் இறந்து விட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகை மாணவருக்கு கிடைக்கும் வகையிலும், விபத்தில் காயமடைந்தாலும் உரிய நிவாரணம் கிடைக்கும் வகையிலும் இந்த காப்பீட்டுத் திட்டம் அமைந்தால், அந்த மாணவரின் எதிர்கால கல்வி பாதிக்காது. 

எனவே, இந்த காப்பீட்டுத் திட்டத்தில் மாணவர்களுடன், அவர்களது பெற்றோருக்கும் காப்பீடு கிடைக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியது: இத்திட்டத்தில் விபத்தில் மாணவர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் தங்கள் குழந்தைகளை இழக்கும் பெற்றோருக்கு, தங்கள் பிள்ளைகளை விடவும் இழப்பீட்டுத் தொகை பெரிதாக தெரியாது. இருப்பினும் இத்திட்டத்தில் மாணவர்களின் பெற்றோரில் வருமானம் ஈட்டுபவருக்கும் சேர்த்து காப்பீடு வழங்கினால், மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்த அச்சம் தவிர்க்கப்படும்.

விபத்தில் மாணவர்களது பெற்றோரில் வருமானம் ஈட்டுபவர் இறந்து விட்டாலோ, தொடர்ந்து வேலை செய்ய முடியாத அளவுக்கு முழு ஊனம் அடைந்து விட்டாலோ, மாணவரது கல்வியை தொடர வழி செய்யும் வகையில், தொடர்ந்து உயர்கல்வி, கல்லூரி கல்வி வரை பயில ஏதுவாக இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும். விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவு, பள்ளி, கல்லூரி கட்டணங்கள் எதுவாயினும் இத்திட்டம் மூலம் நிவாரணம் கிடைக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த பாலிசித் திட்டம் பள்ளி நேரத்தில் மட்டுமன்றி, 24 மணி நேரமும் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் காப்பீட்டை அளிப்பதாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமன்றி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.
-வை.இராமச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com