காற்றில் பரவும் அரிசி ஆலை கருந்துகள்கள்: அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கடும் அவதி

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றி பரவி வரும் அரிசி ஆலையின் கருந்துகள்களால் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் சுவாசக் கோளாறால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காற்றில் பரவும் அரிசி ஆலை கருந்துகள்கள்: அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கடும் அவதி

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றி பரவி வரும் அரிசி ஆலையின் கருந்துகள்களால் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் சுவாசக் கோளாறால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகமானது காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பியில், வேலூர்-சென்னை புறவழிச் சாலைக்கு அருகில் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் பழைமையானதால், இதன் அருகில் புதிய அலுவலகக் கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அலுவலகத்தை ஒட்டிய பகுதிகளில் சமூக நலத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகக் கட்டடங்கள் உள்ளன.
 இப்பகுதியிலும், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் 10-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, கீழம்பி ஊராட்சியில் குடியிருப்புப் பகுதிகள் விரிவடைந்தது. இதையடுத்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரிசி ஆலைகளில் உமி நீக்குவதற்கு (கன்ட்ரி முறை) பயன்படுத்தி வந்த பழைய முறைக்கு மாற்றாக, நவீன பாய்லர் முறையை பயன்படுத்தி உமி துகள்கள் காற்றில் கலக்காதவாறு ஆலைகள் செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. எனினும், சில ஆலைகளைத் தவிர பல அரிசி ஆலைகள் உமி நீக்கும் பழைய முறையையே பின்பற்றி வருவதாகத் தெரிகிறது. இதனால், ஆலைக்கு அருகில் வசிப்போர் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது.
 காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் அரிசி ஆலைகள் முறையாக உமியை வெளியேற்றுவதில்லை. மாறாக, பழைய முறையில் வெளியேற்றப்படும் கருந்துகள்களானது, காற்றில் பறந்தவாறு குடியிருப்புப் பகுதிகள், கல்லூரி, பள்ளிகள், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பரவி காணப்படுகின்றது. அத்துடன், காற்று மாசும் அதிகரித்து வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
 சோலார் தகடுகள் மீது படியும் கருந்துகள்கள்:
 அண்மையில் புதிதாக கட்டப்பட்ட காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தின் மேல் தளத்தின் மின் தேவைக்காக, மூன்றில் இரண்டு பங்கு சூரிய மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆலையிலிருந்து வெளியாகும் கருந்துகள்கள் சூரிய மின்தகடு முழுவதும் படர்ந்து மின்சாரம் தயாரிக்க முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல், அலுவலக கட்டட வளாகத்துக்குள் உள்ள அனைத்து அரங்கு, அறைகள் என அனைத்துப் பகுதிகளிலும் கருந் துகள்கள் படர்ந்து பழைய கட்டடம் போல் காட்சியளிக்கிறது.
 இதனால், நாள்தோறும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நாளைக்கு 2-3 முறை தூய்மைப்படுத்தினாலும் கருந்துகள்கள் படர்ந்து மாசு ஏற்படுத்துவதை தடுக்கமுடியவில்லை என்கின்றனர் ஊழியர்கள். அத்துடன், அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் உள்ளிட்டோரும் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.
 இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சிலர் கூறுகையில், நாள்தோறும் கருந்துகள்கள் படிந்து வருவதால், தூய்மைப்படுத்துவது சிரமத்தை ஏற்படுத்துகிறது. புதிதாக அமைக்கப்பட்ட சூரிய மின் தகட்டிலிருந்தும் மின்சாரம் பெற முடிவதில்லை. சுற்றியுள்ள அரிசி ஆலை உரிமையாளர்களிடம் பல முறை இதுகுறித்து அறிவுறுத்தி வருகிறோம். அப்போது மட்டும் அவர்கள் நிறுத்துகின்றனர்.
 பின்னர், மீண்டும் உமியை முறையாக வடிகட்டி வெளியேற்றாமல், கருந் துகளை காற்றில் விடுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் என்றனர்.
 இதுகுறித்து கீழம்பி வாசிகள் கூறுகையில், நாள்தோறும் அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கருந் துகள்களால் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. மேலும், குடியிருப்புப் பகுதிகள், கல்வி நிறுவனங்கள் அருகே வசிப்போர், வந்து செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் இதுபோன்ற காற்று மாசால் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரிசி ஆலைகளில் உமியை நீக்கும் நவீன முறையை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com