ஆளுநர் மாளிகையில் தயாரான மண்புழு உரம்: சென்னை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன

ஆளுநர் மாளிகையில் தயாரிக்கப்பட்ட மண்புழு உரங்கள், சென்னையில் உள்ள 70 பள்ளிகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டன.
ஆளுநர் மாளிகையில் உற்பத்தியான மண்புழு உரத்தை பள்ளி தலைமை ஆசிரியையிடம் வியாழக்கிழமை வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் அவரது தனிச் செயலர் ராஜகோபால்.
ஆளுநர் மாளிகையில் உற்பத்தியான மண்புழு உரத்தை பள்ளி தலைமை ஆசிரியையிடம் வியாழக்கிழமை வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் அவரது தனிச் செயலர் ராஜகோபால்.

ஆளுநர் மாளிகையில் தயாரிக்கப்பட்ட மண்புழு உரங்கள், சென்னையில் உள்ள 70 பள்ளிகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
ஆளுநர் மாளிகையில் ஏராளமாகக் குவியும் இலை -தழைகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட மண்புழு உரங்கள் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு அளிக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 70 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் மண்புழு உரத்தை ஆளுநர் புரோஹித் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:-
மண்புழு உரத்தின் முக்கியத்துவத்தையும், அதனை தயாரிக்கும் முறையையும் பள்ளிகளின் முதல்வர்களும், தலைமை ஆசிரியர்களும் தெரிந்து கொண்டுள்ளனர். அவர்கள் மண்புழு உரத்தின் அவசியம் குறித்து மாணவ -மாணவிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இளமையில் கற்ற அனைத்தும் எனக்கு நினைவில் உள்ளது. அதேபோன்று, மண்புழு தயாரிக்கும் முறையை மாணவ -மாணவிகளுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் அதனை அவர்கள் சிறு வயதிலேயே நன்கு தெரிந்து கொள்வார்கள் என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com