சிறுமி மீது பாலியல் கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
சிறுமி மீது பாலியல் கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் நிஜாமுதீன் ஆகியோர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
கே.பாலகிருஷ்ணன்: சென்னை, அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பேசும் திறனற்ற, காது கேளாத 7 -ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த பாலியல் கொடூரம் அனைவரின் நெஞ்சையும் பதற வைத்துள்ளது. போக்சோ சட்டத்தின் படியும், சிறுமி மாற்றுத்திறனாளி என்பதால், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தின்படியும் இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும்.
திருமாவளவன்: இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் சிலர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது. அவர்கள் அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும். இவர்கள் அனைவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்பதோடு, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்.
கமல்ஹாசன்: அயனாவரத்தில் 11 வயது சிறுமி 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது மன்னிக்க முடியாத குற்றம். அதற்காக குற்றவாளிகளை தெருவில் அடித்துக் கொன்றுவிட்டால், அது இன்னொரு கொலை குற்றமாகிவிடும். நீதிமன்றத்துக்கும் வேலை இல்லாமல் போய்விடும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் விரைவாகச் செயல்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு சட்டத்தின்படி கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்.
நிஜாமுதீன்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது இதயத்தைத் துளைத்தெடுக்கும் கொடூரச் செயலாகும் . குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com