சேகர்ரெட்டியிடம் 131 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டி: வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

தொழிலதிபர் சேகர்ரெட்டியிடம் 131 கிலோ வெளிநாட்டு தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.

தொழிலதிபர் சேகர்ரெட்டியிடம் 131 கிலோ வெளிநாட்டு தங்கக்கட்டி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
காட்பாடி அருகே காந்திநகரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர், மத்திய, மாநில அரசுகளின் ஒப்பந்தப் பணிகள், மணல் குவாரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில், கடந்த 2016 டிச. 8-ஆம் தேதி வருமான வரித் துறையினர் சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, பிரேம்குமார், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இச்சோதனையில் ரூ.147 கோடி ரொக்கமும், 178 கிலோ தங்கக் கட்டிகளையும், நகைகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.34 கோடி, புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாகும். வருமான வரித் துறையின் விசாரணை நடைபெறும்போதே, விசாரணையில் சிபிஐயும், மத்திய அமலாக்கத்துறையும் பங்கேற்றன.
இதற்கிடையே புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கியது தொடர்பாக சேகர் ரெட்டி மீதும், அவர் கூட்டாளிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதேபோல முறைகேடான வழிகளில் பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றியது, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
131 கிலோ வெளிநாட்டு தங்கக் கட்டி: சோதனையில் சேகர்ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில், 131 கிலோ தங்கக் கட்டிகள் ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டதாகும். சேகர்ரெட்டி, 131 கிலோ தங்கக் கட்டிகளை ஸ்விட்சர்லாந்தில் வாங்கி, இந்தியாவுக்கு கொண்டு வந்ததற்குரிய வரி ஆவணங்களை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த தங்கக் கட்டிகள் கடத்தல் மூலம் சேகர்ரெட்டிக்கு கிடைத்திருக்க வேண்டும் என வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை தொடங்கியது: இதன் விளைவாக, இது குறித்த விசாரணையை வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதல் கட்டமாக இச்சோதனையில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் சேகர் ரெட்டி தரப்பு சரியான விளக்கம் தரவில்லை எனில், சுங்கவரிச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com