"வாகன் சாரதி' இணையதளத்தில் கோளாறு: வாகனப் பதிவில் சுணக்கம் ?

மத்திய அரசின் "வாகன் சாரதி' இணையதளத்தில் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழகத்தில் வாகனப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக

மத்திய அரசின் "வாகன் சாரதி' இணையதளத்தில் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழகத்தில் வாகனப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் குறை கூறுகின்றனர்.
 மத்திய போக்குவரத்துத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள "வாகன் சாரதி' என்ற இணையதளத்தில், நாடு முழுவதும் புதிய வாகனங்கள் பதிவு செய்தல், ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனங்களுக்கான தகுதிச் சான்று பெறுதல், பதிவை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த இணையதளத்தை ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
 இதனால் சர்வரில் அடிக்கடி பழுது ஏற்பட்டு பணிகள் தேக்கமடைகின்றன என்ற புகார் பரவலாக எழுந்தது. இதையடுத்து அந்த சர்வர் அண்மையில் புதுப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதன்படி ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிப்பதற்கு "பாரி வாகன்' என்ற சர்வர் தற்போது பயன்படுத்தப்படுகிறது. வாகனம் பதிவு செய்ய "வாகன் சாரதி வர்ஷன்-4' என்ற புதிய சர்வர் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பதிவேற்றம் செய்யும் பணி ஆந்திரம், புதுதில்லி ஆகிய மாநிலங்களில் முழுமையாக முடிந்து விட்டது. தமிழகத்தில் தற்போது சென்னையில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் (ஆர்டிஓ)
 புதிய சர்வரில் பதிவேற்றம் படிப்படியாக செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக கே.கே.நகர், அண்ணாநகர் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் புதிய சர்வர் பயன்பாட்டுக்கு வந்தது.
 அதைத் தொடர்ந்து அயனாவரம், மந்தைவெளி, திருவான்மியூர், சோழிங்கநல்லூர் என அடுத்தடுத்து மொத்தம் உள்ள 18 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் புதிய சர்வர் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்நிலையில், புதிய சர்வரால் சென்னையில் வாகனப் பதிவு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தரப்பில் கூறியது:
 திருட்டு வாகனத்தை அடையாளம் காண்பது, உடனடியாக பதிவுச்சான்று பெறுவது என பல வழிகளில் புதிய சர்வர் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் சர்வரின் அனைத்து கட்டுப்பாடுகளும் தில்லியில் இருப்பதால் பதிவுப் பணியில் தாமதம் ஏற்படுகிறது.
 ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த சர்வரில், ஏதாவது கோளாறு ஏற்பட்டாலும் அதை அந்தந்த ஆர்டிஓ அலுவலகங்களிலேயே சரிசெய்து கொள்ளலாம். ஆனால் தற்போதுள்ள சர்வரில், திருத்தம் ஏதேனும் மேற்கொள்ள வேண்டும் எனில் தில்லிக்கு தகவல் அனுப்பப்பட்டு, அங்கிருந்து ஒப்புதல் கிடைத்த பிறகே திருத்தம் மேற்கொள்ள முடியும். இதனால் வாகனப் பதிவு எண்ணிக்கை குறைந்து ஆவணம் தேக்கம் அடைந்துள்ளது.
 சென்னையில் நாள்தோறும் 50 முதல் 100 வாகனங்கள் பதிவு செய்யப்படும். ஆனால் தற்போது புதிய சர்வரில் 30 முதல் 40 வாகனங்கள்தான் பதிவு செய்ய முடிகிறது. கடந்த ஒரு வாரத்தில் 400-க்கும் மேற்பட்ட வாகனப்பதிவு ஆவணங்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் இந்த தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்ய வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com