பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட சிக்கல்: தீர்வு என்ன?

நாட்டுக்கே உதாரணமான பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பிஏபி), கேரள அரசியல்வாதிகளின் செயல்களால் சிதையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட சிக்கல்: தீர்வு என்ன?
Published on
Updated on
3 min read

நாட்டுக்கே உதாரணமான பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (பிஏபி), கேரள அரசியல்வாதிகளின் செயல்களால் சிதையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு ஒரே தீர்வான ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆண்டுக்கு 70 அங்குலம் மழை பொழியும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆனைமலை பகுதிகளில், மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலந்து வீணாகும் நீரைத் தடுத்து அவற்றை சமவெளியில் பாயும் ஆறுகளுடன் இணைத்து, கிழக்கு நோக்கித் திருப்பி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கும், கேரளத்தின் சித்தூர் பகுதிக்கும் பாசன வசதி அளிப்பதுதான் பிஏபி திட்டம்.

இரு மாநிலத்துக்கும் பயன்பட்டாலும் இதன் மொத்த செலவு ரூ.44 கோடியை தமிழகமே ஏற்றது. ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம் ஆறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் ஆறு என ஆனைமலைக் குன்றுகளில் உள்ள 6 ஆறுகளும், ஆழியாறு, பாலாறு என சமவெளிகளில் பாயும் 2 ஆறுகளும் என மொத்தம் 8 ஆறுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றை இணைக்கும் வகையில் 10 அணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டதில், அப்பர்நீராறு, லோயர் நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டு நீர்ப் பகிர்மானம் நடைபெறுகிறது. ஆனைமலையாறு அணை மட்டும் கட்டப்படவில்லை.
கேரளத்துக்குல் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் இருந்தாலும் பராமரிப்பது தமிழக பொதுப் பணித் துறைதான். இதற்காகத் தமிழக அரசு கேரளத்துக்கு குத்தகை செலுத்துகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரும் நேரடியாகப் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 200 மெகா வாட் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.
கிடைக்கும் நீரில் 30.50 டி.எம்.சி. அளவு தமிழகமும், 19.55 டி.எம்.சி. அளவு நீரை கேரளமும் பகிர்ந்து கொள்கின்றன. தமிழகத்துக்கு முழுமையான அளவு தண்ணீர் ஒருமுறை கூடக் கிடைக்கவில்லை என்றாலும், கேரளத்துக்குப் பெரும்பாலான ஆண்டுகளில் முழுமையாகத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.
கேரளப் பகுதிக்குள் தமிழக கட்டுப்பாட்டில் இருக்கும் 3 அணைகளையும் கையகப்படுத்த கேரள அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த 2013-இல் தில்லியில் நடைபெற்ற தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியதால் பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகளை கேரள அணைகள் என்ற பிரிவில் சேர்ப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து இந்த அணைகளில் பணியாற்றி வரும் தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத் துறையினர், காவல் துறையினர் மூலம் தொடர்ந்து நெருக்கடிதான். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரிகள் உள்ளிட்ட தமிழர்கள் 18 பேரை கேரள காவல் துறையினர் கடுமையாகத் தாக்கினர். மழை குறைந்ததால் தமிழகப் பாசனத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் குறைவான நீரை விநியோகித்தாலும், கேரளத்துக்கு வழங்க வேண்டிய நீர் வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு வழங்க வேண்டிய 7.25 டி.எம்.சி.யில் பிப். 24 வரை 5.50 டி.எம்.சி. வழங்கப்பட்டுள்ளது., மீதமுள்ள நீரை வழங்க 4 மாத அவகாசம் இருந்தாலும் உடனடியாக நீரை வழங்க வேண்டும் என்று கேரள மாநிலம் சித்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணன் குட்டி உள்ளிட்டோர் தமிழகத்துக்கு நெருக்கடி கொடுத்தனர்.
தமிழக வாகனங்களைத் தாக்கியும், தடுத்து நிறுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்டதால் தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நீர் கேரளத்துக்கு மாற்றப்பட்டது. இது தமிழக விவசாயிகளைப் போராட்டத்துக்குத் தள்ளியது. கேரளத்தின் இடையூறின்றி தமிழக விவசாயிகளுக்கு பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டுமானால் ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கின்றனர் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள்.

நல்லாறு அணைத் திட்டம்:

பிஏபி ஒப்பந்தப்படி மேல் நீராறு அணை நீர் (சராசரியாக 9 டி.எம்.சி.) முழுவதும் தமிழகத்துக்கு சொந்தம். ஆனால், இந்த நீரை சமவெளியில் உள்ள திருமூர்த்தி அணைக்கு கொண்டு வர சுமார் 100 கி.மீ. தொலைவு உள்ளது. ஆனால், மேல் நீராறில் கிடைக்கும் நீரை சுமார் 14.40 கி.மீ.க்கு சுரங்கம் அமைத்து நல்லாறுக்கு கொண்டு வருவது, பின்னர் அங்கு ஓர் அணை கட்டி திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் கொண்டு செல்வதுதான் நல்லாறு திட்டம்.
இந்தத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு பொதுப்பணித் துறை சார்பில் சுமார் ரூ. 715 கோடி செலவாகும் என காவிரி தொழில்நுட்ப ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் மூலம் 250 மெ.வா. மின் உற்பத்தி செய்யமுடியும். இப்போது இந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது.

ஆனைமலையாறு திட்டம்: 

ஆனைமலையாறு, இட்லியாறு ஒன்று சேரும் இடத்தில், அப்பர் நீராறு, லோயர் நீராறு அணைக்கு மேல், இட்லியாறுக்கு குறுக்கே சிறிய அணை கட்டி, அங்கிருந்து 6 கி.மீ.க்கு சுரங்கம் அமைத்தால் தண்ணீர் கீழ்நீராறு அணைக்கு வந்துசேரும். அங்கிருந்து சோலையாறு, பரம்பிக்குளம் வழியாக தண்ணீரைத் தமிழகம் கொண்டு வரலாம். 
இத்திட்டப்படி தமிழகத்துக்கு கூடுதலாக 4.25 டி.எம்.சி. நீர் கிடைக்கும். இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான உத்தேச மதிப்பீடு ரூ.585 கோடி.
பிரச்னை என்ன?
பிஏபி திட்டம் தொடங்கி 60 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், தற்போது வரை ஆனைமலையாறு அணைத் திட்டம் விவசாயிகளின் கனவாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும் இடம் பெறுகிறது.
தமிழகம் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் போனதற்கு முக்கிய காரணம், கேரள அரசு இடைமலையாறு அணையைக் கட்டி முடிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான், தமிழகம், ஆனைமலையாறு அணைத் திட்டத்தைக் கட்ட வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது கேரளம்.
கடந்த சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அணை கட்டி முடித்து, 75 மெகாவாட் மின்உற்பத்தி செய்தாலும், ஒரேயொரு கால்வாயைக் கட்டாமல் அத் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை என்கிறது கேரளம்.
திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாகக் கூறினால் நீராறில் கிடைக்கும் 4.25 டி.எம்.சி. நீரை தமிழகம் எடுத்துக் கொள்ளும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.
இந்தத் திட்ட அதிகாரிகளுக்கே ஒப்பந்தத்தின் கூறுகள் தெரியாமல் இருப்பதுதான் தமிழகத்தின் நீர் இழப்புக்குக் காரணம். இப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். கடந்த 1991ஆம் ஆண்டு போடப்பட்ட திருமலை கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். கேரளத்துக்கு தண்ணீர் வழங்குவது நமது கடமை மட்டுமல்ல, சகோதர உணர்வும் ஆகும். பருவ காலத்தில் நீரைப் பகிர்ந்து கொள்வதைப் போல், வறட்சிக் காலத்திலும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல மனதும் வேண்டும் என்கிறார் என்கிறார் பிஏபி திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் பரமசிவம். 
ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களைச் செயல்படுத்தினால் சுமார் 13 டி.எம்.சி. கூடுதல் நீர் கிடைக்கும். இதன் மூலம் இத்திட்டத்தில் உள்ள 4.25 லட்சம் ஏக்கருக்கும் ஆண்டு முழுவதும் தண்ணீர் வழங்க முடியும் என்கிறார் ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயி பட்டீஸ்வரன்..


பிஏபி திட்டத்தில் ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரை தண்ணீர்ப் பங்கீடு ஆண்டாக கணக்கிடப்படுகிறது. தமிழகத்துக்கு 30.50 டி.எம்.சி.யும், கேரளத்துக்கு 19.55 டி.எம்.சி.யும் பங்கு உள்ள நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2018 வரை இரு மாநிலங்களும் நீரைப் பங்கீடு செய்து கொண்ட விவரம்:  (அளவு டி.எம்.சி.யில்)


ஆண்டு தமிழகம் கேரளம்

2008-2009 18.46 19.97 
2009-2010 27.00 19.89
2010-2011 28.48 19.89
2011-2012 16.83 20.13
2012-2013 15.79 16.24
2013-2014 22.82 20.47
2014-2015 26.87 20.19
2015-2016 13.17 18.41
2016-2017 12.67 12.58
2017-2018 (பிப்ரவரி வரை) 14.35 15.77

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com