முதியோருக்கான இலவச பஸ் டோக்கன்களைப் பெற ஆதார், குடும்ப அட்டை அவசியம்

முதியோர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை மற்றும் டோக்கன்களைப் பெற குடும்ப அட்டை, ஆதார் அட்டை அவசியம் கொண்டுவர வேண்டும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

முதியோர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை மற்றும் டோக்கன்களைப் பெற குடும்ப அட்டை, ஆதார் அட்டை அவசியம் கொண்டுவர வேண்டும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் வசிக்கும் முதியவர்கள், புதிதாக இலவச பேருந்து பயண அட்டை மற்றும் டோக்கன்களை அந்தந்த பகுதிகளில் உள்ள பணிமனைகளில் அனைத்து நாட்களிலும் பெறலாம்.
இவற்றை புதிதாக பெற விரும்புகிறவர்களும் மற்றும் புதுப்பிக்க வரும் முதியவர்களும் அவர்களது குடும்ப அட்டை அசல் மற்றும் ஆதார் அட்டை அசல் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இதில் ஆதார் அட்டை நகல் ஒன்றை கண்டிப்பாக வழங்க வேண்டும்.
ஒவ்வொரு காலாண்டுக்கும், முந்தைய காலாண்டின் கடைசி மாதத்தின் 21-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் மூன்று மாதத்துக்கான இலவச பேருந்து பயண அட்டை மற்றும் டோக்கன்களை மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக, 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டுக்கு 2018 மார்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் வரை பெற்றுக் கொள்ள முடியும். ஏற்கெனவே உள்ள மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 42 மையங்களில் இந்த விலையில்லா டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.
பயண அட்டை வழங்கும் மையங்கள்:
பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையம், கிண்டி எஸ்டேட், கே.கே.நகர், மந்தைவெளி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், தியாகராயர் நகர், திருவான்மியூர், வடபழனி, அய்யப்பன்தாங்கல், வில்லிவாக்கம், அம்பத்தூர், அண்ணா நகர் (மேற்கு), கோயம்பேடு, அயனாவரம், சுங்கச்சாவடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, பெரம்பூர், செங்குன்றம், எம்.கே.பி. நகர், ஆவடி, பூந்தமல்லி, வள்ளலார் நகர், திருவொற்றியூர் ஆகிய பேருந்து நிலையங்களிலும், அடையார், வியாசர்பாடி, மாதவரம், செம்மஞ்சேரி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, (தாம்பரம்) சானிடோரியம், தண்டையார்பேட்டை, பேசின் பாலம், மத்திய பணிமனை, எண்ணூர், பாடியநல்லூர், பெசன்ட் நகர் ஆகிய பணிமனைகளிலும் முதியவர்களுக்கான இலவச பேருந்து பயண அட்டை மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும். 
இந்த 42 மையங்களும் காலை 8.30 முதல் நண்பகல் 1.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com