உதகையில் கலைக்கூடமாக மாறிய பொதுக் கழிப்பிடம்!

துர்நாற்றம் வீசிய பாதையில் இன்று மலர்களின் மணம் வீசுகிறது என்றால் அதை உதகை நகராட்சியின் சாதனை என்றே கூறலாம்
உதகையில் கலைக்கூடமாக மாறிய பொதுக் கழிப்பிடம்!

துர்நாற்றம் வீசிய பாதையில் இன்று மலர்களின் மணம் வீசுகிறது என்றால் அதை உதகை நகராட்சியின் சாதனை என்றே கூறலாம். உதகை நகரின் நுழைவுப் பகுதியான சேரிங் கிராஸிலிருந்த பொதுக் கழிப்பிடம்தான் தற்போது கலைக்கூடமாக உருமாறி இருக்கிறது.
 உதகையைச் சேர்ந்த பிரபல ஓவியரான மாதவன் பிள்ளை, "மேக் ஊட்டி பியூட்டி' என்ற அமைப்பின் தலைவர் ஷோபனா, சமூக ஆர்வலர் அனிதா ஆகியோரின் முயற்சியால் இந்தக் கலைக்கூடம் உருவாகியுள்ளது.
 உதகையில் சேரிங் கிராஸ் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுக்கழிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் போதிய பராமரிப்பின்றி இந்தக் கழிப்பிடம் கைவிடப்பட்டது. இந்தக் கழிப்பிடம் மூடப்படாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவிட்டது.
 அதன் காரணமாக இந்தக் கழிப்பிடம் அமைந்திருந்த சாலையில் நடந்து செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்தப் பிரச்னை தொடர்பாக உதகை நகர்மன்ற ஆணையர் ரவியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு இதைச் சீரமைக்க அவர் முன்வந்தார்.
 இந்நிலையில் "கேலரி ஒன் டூ' என்ற தன்னார்வ அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி, மேலைநாடுகளில் கைவிடப்பட்ட பொதுக் கழிப்பிடங்களை கலைக்கூடங்களாக மாற்றியிருப்பதாகவும், அதுபோல இந்த பொதுக் கழிப்பிடத்தையும் தங்களால் மாற்ற முடியும் என்றும் தெரிவித்தனர்.
 அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன், உதகை நகர்மன்ற ஆணையர் ரவி சுமார் ரூ. 3 லட்சம் செலவில் இந்த பொதுக்கழிப்பிடத்தை சீரமைத்துத் தந்தார். கலைக்கூடமாக மாறிவிட்ட இந்த பொதுக் கழிப்பிட கட்டடத்தில், தற்போது புதுவையைச் சேர்ந்த ராஜ்குமார் ஸ்தபதி என்ற ஓவியரின் ஓவியப் படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
 உலகின் 40 நாடுகளில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ள ராஜ்குமார் ஸ்தபதி, முதன்முறையாக உதகையில் இந்தக் கலைக்கூடத்தில் தனது ஓவியக் கண்காட்சியை அமைத்துள்ளார்.
 இந்தப் புதுமையான முயற்சி குறித்தும், கலைக்கூடம் குறித்தும், இதன் காப்பாட்சியராக உள்ள மாதவன் பிள்ளை நமது செய்தியாளரிடம் கூறியதாவது:
 தூய்மை இந்தியா திட்டம் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அது பெயரளவில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. எனவேதான், கைவிடப்பட்ட ஒரு கட்டடத்தை கலைக்கூடமாக மாற்றி தற்போது அதன் அழகியலை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.
 இந்தக் கலைக்கூடத்தில் பல ஓவியர்களின் படைப்புகள் சுழற்சி முறையில் தலா 21 நாள்களுக்கு இடம் பெறும். இங்கு மாதந்தோறும் ஓவியம் தொடர்பான வகுப்புகளும், உரைகளும், பயிலரங்குகளும் நிகழ்த்தப்படுகின்றன.
 தற்போது அயர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் இந்தக் கலைக்கூடத்தில் சர்வதேச அளவிலான ஓவியக் கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
 உதகை நகர்மன்ற ஆணையர் ரவி கூறுகையில், கலைக்கூடம் நடத்துவதற்காக, பழுதடைந்து, பயன்பாடற்ற நிலையிலிருந்த பொதுக் கழிப்பிடம் சுமார் ரூ. 3 லட்சம் செலவில் புதுப்பித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இக்கட்டடத்தின் பராமரிப்புச் செலவையும், மின் கட்டணத்தையும் அவர்களே செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து, எதிர்காலத்தில், கலைக்கூட அமைப்பின் நிர்வாகிகளிடமிருந்து கட்டணம் வசூலிப்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
 இதேபோல கைவிடப்பட்ட கட்டடங்கள் எங்கேனும் இருந்தாலும் அவற்றை சுற்றுலா மேம்பாட்டு நோக்குடன் பயன்படுத்திக் கொள்ள உதகை நகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது என்றார்.
 சேரிங் கிராஸ் பகுதியில் இந்த ஓவிய கலைக்கூடம் அமைக்கப்பட்ட உடன், அதன் அருகிலேயே நவீனக் கழிப்பிடம் ஒன்று அமைக்கப்பட்டு விட்டது. அத்துடன் அதன் அருகில் சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் சார்பில் அழகிய அலுவலகம் ஒன்றும் உருவாக்கப்பட்டு விட்டது.
 இக் கலைக்கூடத்தின் எதிரே புதர் மண்டிய நிலையிலிருந்த தோடரின மக்களின் கூட்டுறவு சங்க அலுவலக வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு, தற்போது மூலிகைப் பூங்காவாக மாற்றப்பட்டு வருகிறது.
 எவ்வித விளம்பர அறிவிப்புகளும் இல்லாமலிருந்தும்கூட ஏராளமானோர் இந்த கலைக்கூடத்துக்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com