அண்ணா பல்கலைக்கழகத்தின் 3 மண்டலங்களில் புதிதாக இளநிலைப் படிப்புகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் மூன்று மண்டலங்களிலும் இளநிலைப் படிப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 3 மண்டலங்களில் புதிதாக இளநிலைப் படிப்புகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


அண்ணா பல்கலைக்கழகத்தின் மூன்று மண்டலங்களிலும் இளநிலைப் படிப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு மண்டலத்துக்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் 720 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
இந்தியாவிலேயே தர வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், சென்னையில் நான்கு வளாகங்களிலும், சென்னையைத் தவிர தமிழகத்தில் 13 உறுப்புக் கல்லூரிகளிலும் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை பயிற்றுவித்து வருகின்றன.
ஆனால், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் மண்டல வளாகங்களில் பொறியியல் முதுநிலை பட்டப் படிப்பு மட்டும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. அந்த மண்டலங்களிலும், இளநிலை பட்டப் படிப்புகளையும் தொடங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
அதனை ஏற்று, ஏழை-எளிய மாணவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பொறியியல் இளநிலை பட்டப்படிப்பு பயில்வதற்கு வசதியாக, இப்போது திருநெல்வேலி, மதுரை, கோவை மண்டல வளாகங்களில் ஏற்கெனவே உள்ள பொறியியல் முதுநிலை பட்டப் படிப்புகளோடு ஒவ்வொரு மண்டலத்திலும் நான்கு இளநிலை படிப்புகளை ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 60 மாணவர் சேர்க்கை என்ற வீதத்தில் இந்த கல்வியாண்டு (2018-19) முதல் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஒவ்வொரு மண்டலத்துக்கும் 4 பாடப் பிரிவுகளில் தலா 240 சேர்க்கை இடங்கள் வீதம் மொத்தம் 720 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். 
இதன்மூலம், அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை-எளிய மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், குறைந்த கட்டணத்தில் தரமான தொழிற்கல்வியை பெறுவர் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com