உதகை கோடை விழா: 122 ஆவது மலர்க் காட்சியை இன்று தொடங்கிவைக்கிறார் முதல்வர்

உதகை கோடை சீசனின் முக்கிய நிகழ்வான உதகை மலர்க் காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று தொடங்கிவைக்கிறார்.
உதகை கோடை விழா: 122 ஆவது மலர்க் காட்சியை இன்று தொடங்கிவைக்கிறார் முதல்வர்

உதகை கோடை சீசனின் முக்கிய நிகழ்வான உதகை மலர்க் காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இன்று தொடங்கிவைக்கிறார்.
கோடைக் காலத்தில் நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி,  கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சி,  உதகையில்  ரோஜா காட்சி மற்றும் மலர்க் காட்சி,  குன்னூரில் பழக் காட்சி ஆகியவை தோட்டக்கலைத் துறையின் சார்பில் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கோடைக்கால சீசனையொட்டி கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சியும்,  கூடலூரில் வாசனை திரவியக் கண்காட்சியும்,  உதகையில்  ரோஜா காட்சியும் முடிவடைந்துள்ளன. கோடை சீசனின் முக்கிய நிகழ்வான உதகை மலர்க் காட்சி மே 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)  முதல் 22ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு நடைபெறுகிறது.
மலர்க் காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிவைக்கிறார். அதைத் தொடர்ந்து ரூ.1,850 கோடி மதிப்பீட்டினாலான குந்தா நீரேற்றுப் புனல் மின் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
பின்னர் ரூ. 7.49 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 7 திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கிறார்.  ரூ.10.85 கோடி மதிப்பீட்டில் 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 1,577 பயனாளிகளுக்கு ரூ.11.25 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மலர்க் காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை பிற்பகலில் உதகை வந்துள்ளார். முதல்வரை  நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கோத்தகிரியில் வரவேற்றார். மலர்க் காட்சித் தொடக்க விழாவில் முதல்வருடன்  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,  மின் துறை அமைச்சர் பி.தங்கமணி,  உள்ளாட்சித் துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி,  வேளாண்மைத் துறை  அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மலர்க் காட்சியையொட்டி தாவரவியல் பூங்காவில் சுமார் 90,000 காரனேஷன் மலர்களைக் கொண்டு மேட்டூர் அணையின் உருவமும்,  8,000 காரனேஷன் மலர்களைக் கொண்டு செல்ஃபி ஸ்பாட்டும், 3,000 ஆர்க்கிட் மற்றும் காரனேஷன்  மலர்களைக் கொண்டு பார்பி பொம்மையின் உருவமும்,  விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உழவன் செயலியும், 122வது மலர்க் காட்சியை  குறிப்பிடும் வகையில் பூங்காவின் முகப்பில் 30,000 ரோஜா மலர்களாலான மலர் சுவரும் அமைக்கப்பட்டுள்ளன. துலீப் மலர்களாலான சிறப்பலங்காரமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
பூங்காவின் 3 பகுதிகளில் சுமார் 50,000 பூந்தொட்டிகள் காட்சி மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தொடக்க நாள் நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணியின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com