துப்பாக்கிச் சூடு சம்பவம்: 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
துப்பாக்கிச் சூடு சம்பவம்: 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இந்திய உணவுக்கழக கிட்டங்கி அருகே போலீஸாரின் தடுப்புகளை தகர்த்துவிட்டு முன்னேறிச் சென்ற போராட்டக்காரர்களில் சிலர், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதேபோல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இதுதவிர ஒரு வேன் உள்பட 4 காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் தீக்கிரையாகின.
வெறிச்சோடிய தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 22-ஆம் தேதி கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாநகரப் பகுதியில் உள்ள சுமார் 30 ஆயிரம் கடைகள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன. இதனால் தூத்துக்குடி நகரமே மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு மாநகரப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டதால், மக்கள் வெளியே வரவில்லை. இதனால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பேருந்துகள் நிறுத்தம்: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காலை 10 மணியளவில் தீவிரமடைந்தது. இதையடுத்து திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த அனைத்துப் பேருந்துகளும் புதுக்கோட்டையில் நிறுத்தப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மாநகரமே ஸ்தம்பித்தது.

10-ஆம் வகுப்பு மாணவி பலி

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்னோலின் வெனிஸ்டா (17) பத்தாம் வகுப்பு மாணவியாவார். கடந்த ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வெழுதிய வெனிஸ்டா, தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்துவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com