பாலியல் வழக்கு விசாரணை: ஆய்வாளர்களுக்கு பயிற்சியளிக்க டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக அனைத்துக் காவல் ஆய்வாளர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என காவல்துறை டிஜிபிக்கு உயர்


பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக அனைத்துக் காவல் ஆய்வாளர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என காவல்துறை டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்றம் வெங்கடேசனுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மனுதாரரை 11 மாதங்களுக்குப் பின்னரும், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த 13 நாள்களுக்குப் பின்னரும் போலீஸார் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியது அற்பத்தனமானது. அதே போன்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் இருந்த காதல் தொடர்பாகவும், வெங்கடேசனின் சொத்துப் பிரச்னை தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டுள்ளது. 
மருத்துவப் பரிசோதனையின்போது பாதிக்கப்பட்ட பெண், தன்னை மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு நன்கு தெரிந்தவரான வெங்கடேசனின் பெயரை ஏன் சொல்லவில்லை. பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்கத் தெரியாமல், விசாரணை அதிகாரியான காவல்துறை ஆய்வாளர் இந்த வழக்கை சாதாரணமாக விசாரித்துள்ளார். எனவே இந்த வழக்கில் இருந்து மனுதாரர் வெங்கடேசன் விடுதலை செய்யப்படுகிறார். அவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்த நீதிமன்றம் ரத்து செய்கிறது. மேலும் அவரிடம் இருந்து அபராதம் ஏதாவது வசூலிக்கப்பட்டிருந்தால், அதனை அவருக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை எவ்வாறு புலன் விசாரணை செய்வது என்பது குறித்து அனைத்துக் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் சிறப்புப் பயிற்சி வழங்க காவல்துறை டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com