பக்கிங்ஹாம் கால்வாயில் விடப்படும் சுனாமி குடியிருப்பு கழிவுநீரால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

பக்கிங்ஹாம் கால்வாயில் விடப்படும் சுனாமி குடியிருப்பு கழிவுநீரால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்புத் திட்ட அடுக்குமாடி வீடுகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் சென்னையில் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான பக்கிங்ஹாம் கால்வாயில் விடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வு குடியிருப்புத் திட்ட அடுக்குமாடி வீடுகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் சென்னையில் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான பக்கிங்ஹாம் கால்வாயில் விடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 சென்னை எர்ணாவூர் சுனாமி மறுவாழ்வுத் திட்ட அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் மறுவாழ்வு குடிமர்த்தல், சாலை விரிவாக்கத்தின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு மறுகுடியமர்த்தல் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது இப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
 முழுமை பெறாத பாதாளச் சாக்கடை வசதி: பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் கீழ் கழிவுநீர் அகற்றல் வாரியம் சார்பில் ராமகிருஷ்ணா நகரிலிருந்து பாரத்நகர், ஜோதிநகர், சத்திய மூர்த்தி நகர் வழியாக பங்கிங்ஹாம் கால்வாய் வரை பிரதானக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மணலி சாலையில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மைய கட்டுமானப் பணி நிறைவடையவில்லை. இந்நிலையில், பெரிய அளவிலான தொட்டிகளில் சேமித்து லாரிகள் மூலம் வெளியேற்றும் பணியை முழுமையாக செய்ய முடியாமல் போனது. இதனால் தெருக்களில் கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தொட்டிகளில் சேமிக்கப்பட்ட கழிவுநீர் மோட்டார் பம்புகள் மூலம் செயல்பாட்டுக்கு வராத பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுத்திரிகரிப்பு இன்றி நேரடியாக ஜோதி நகர் அருகே பக்கிங்ஹாம் கால்வாயில் இந்த கழிவுநீர் கலக்கிறது. இது மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுத்துள்ளது.
 சாலையில் ஓடும் கழிவுநீர்: கழிவுநீரை விரைவாக அகற்றும் வகையில் ஆங்காங்கே விசைப் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்று செயல்படாமல் போனால், எதிர் அழுத்தம் காரணமாக ஆள் இறங்கும் குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி தெருக்களில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் பாதிப்புக்குள்ளாகும் தெருக்கள் சில நாள்களுக்கு சுகாதார சீர்கேட்டையும், துர்நாற்றத்தையும் சந்திக்கும் அவலம் நேரிடுகிறது.
 சுகாதார சீர்கேடு: திருவொற்றியூரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் சுமார் 12 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் முழுமை அடையவில்லை. இதனால் திருவொற்றியூர் மண்டலத்துக்குட்பட்ட 6 வார்டுகளில் கழிவுநீரை வெளியேற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இப்பகுதிகளில் உள்ள வீடுகளின் தொட்டிகளில் சேமிக்கப்படும் கழிவுநீரை அகற்ற போதிய அளவில் வசதிகள் இல்லாததால் தனியார் லாரிகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அத்துடன், தனியார் லாரிகள் மூலம் அகற்றப்படும் கழிவுநீர் கடற்பகுதியில் வெளியேற்றும் அவலமும் தொடர்கிறது.
 இந்நிலையில், அரசு குடியிருப்புத் திட்டப் பகுதியின் கழிவுநீர் எவ்வித சுத்திகரிப்பு இன்றி பக்கிங்ஹாம் கால்வாயில் வெளியேற்றப்படுவது இப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 பசுமைத் தீர்ப்பாயம் நடவடிக்கை எடுக்குமா?: இதுகுறித்து பசுமைத் தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். நீண்டகாலமாக நடைபெறும் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்களையும், சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் கழிவுநீரை அகற்ற தாற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com