புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்: 124 படங்கள் திரையிடப்படுகின்றன

புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 124 பன்மொழித் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே அரங்கில் சர்வதேச திரைப்பட விழாவை புதன்கிழமை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த முதல்வர் வே.நாராயணசாமி.
புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே அரங்கில் சர்வதேச திரைப்பட விழாவை புதன்கிழமை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த முதல்வர் வே.நாராயணசாமி.


புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 124 பன்மொழித் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
புதுவை சுற்றுலாத் துறை, பிக்யூர் பிளிக் என்ற இந்திய சினிமா ஸ்டிரீமிங் நிறுவனம் ஆகியவை இணைந்து சர்வதேச திரைப்பட விழாவை முதல் முறையாக புதுச்சேரியில் நடத்துகின்றன. இதன் தொடக்க விழா புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சே டி பாண்டிச்சேரி அமைப்பு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
திரைப்பட விழாவைத் தொடங்கி வைத்து புதுவை முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரியில் முதல் முறையாக சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் 124 பன்மொழித் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
புதுவை சிறிய மாநிலம்தான் என்றாலும், இங்குள்ள மக்களின் மனது மிகப் பெரியது. பல்வேறு இன மக்களும் அமைதியான முறையில் சேர்ந்து வாழ்ந்து வருவது புதுவையில் மட்டும்தான். ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்கும் ஊரும் இதுதான். இங்கு ஓய்வு பெற்றோருக்கான சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, பாரம்பரியச் சுற்றுலா என 3 விதமான சுற்றுலாக்கள் உள்ளன.
இந்தோ - பிரெஞ்சு கலாசாரம் வேரூன்றியுள்ள புதுச்சேரியில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன. அந்த வரிசையில், இந்த சர்வதேச திரைப்பட விழாவும் இணைந்துள்ளது. இந்தத் திரைப்பட விழா இனி ஆண்டுதோறும் நடைபெறும் என்றார் முதல்வர் நாராயணசாமி.
விழாவில், பிரான்ஸ் துணைத் தூதர் கேத்தரின் ஸ்வார்டு, புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்ற டூ லெட் திரையிடப்பட்டது. இதில் திரைப்பட விழா இயக்குநர் சைபல் சாட்டர்ஜி, நிறுவனர் அபிஷேக் சின்ஹா, தலைமை நிர்வாக அதிகாரி பிக்யூர்பிளிக், டூ லெட் திரைப்பட இயக்குநர் செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த 124 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில் 10 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஓடக்கூடிய திரைப்படங்கள் இடம் பெறுகின்றன. இந்தப் படங்கள் அலையன்ஸ் பிரான்சே, ஆரோவில், புதுவை பல்கலைக்கழகக் கலையரங்கு ஆகிய இடங்களில் திரையிடப்படுகின்றன. இதில் வெற்றி பெறும் திரைப்படங்களுக்கு நிறைவு நாளான அக்.30-ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com