நியூட்ரினோ திட்டத்தால் 5 மாவட்டங்களுக்கான நீராதாரம் பாதிக்கப்படுமா?

தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான நீராதார
தேனி மாவட்டம், தேவாரம் அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள பொட்டிப்புரம், அம்பரப்பர் மலை.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ள பொட்டிப்புரம், அம்பரப்பர் மலை.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான நீராதாரம் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நியூட்ரினோ ஆய்வுக்கு ஏற்ற வகையில் 2 கி.மீ.க்கும் மேல் சுற்றளவில், அடுக்குப் பாறைகளற்ற மலையாக உள்ளதால் இத் திட்டத்திற்கு அம்பரப்பர் மலை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அம்பரப்பர் மலை 25 அடி அகலத்திற்கு செங்குத்தாக 1.3 கி.மீ. தொலைவு குடையப்பட்டு, 80 அடி அகலத்திற்கு மலைக் குகை அமைக்கப்படும். இந்த குகையில் 50 ஆயிரம் டன் எடையுள்ள மின்காந்த சாதனம் பொருத்தப்படும். மலையின் பக்கவாட்டில், தரை தளத்தில் இருந்து 25 அடி அகலத்திற்கு 2.1 கி.மீ. தொலைவு வரை குடைந்து அங்கு 38 அகலத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 
அதிர்வினால் அபாயம்?: இந்த ஆய்வு திட்டத்திற்கு அம்பரப்பர் மலை குடையப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கும். வன விலங்குகளின் இடப்பெயர்ச்சி தடைபடும். மலைப் பகுதியில் கால்நடை மேய்ச்சல் உரிமை பறிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தற்போது முல்லைப் பெரியாறு அணையில் பூர்வீக பாசனப் பரப்புகளுக்கும், குடிநீருக்குமே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கும் முல்லைப் பெரியாறு அணை தண்ணீரை பயன்படுத்த அனுமதிப்பதால் விவசாய நிலங்கள் தரிசாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு குறித்து கஸ்தூரி ரங்கன் அறிக்கை பரிந்துரைகளுக்கு முரணாக உள்ளதாகவும், அம்பரப்பர் மலையைக் குடைவதற்கு வெடி வைக்கும்போது ஏற்படும் அதிர்வினால், அதற்கு 16 கி.மீ. தொலைவு வான்வெளி தொலைவில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கும், 26 கி.மீ. வான்வெளி தொலைவில் உள்ள இடுக்கி அணை மற்றும் தேனி, இடுக்கி மாவட்டங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சிறு அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, பசுமைப் பள்ளத்தாக்காக உள்ள தேனி மாவட்டத்தில் இத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையும், அதில் உள்ள 66 ஏக்கர் புறம்போக்கு நிலமும் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்காக காடுகளையும், விவசாய நிலங்களையும் கையகப்படுத்தவில்லை. திட்டமிட்ட வெடிப்பின் மூலமே மலை குடையப்படும். இந்த வெடிப்பினால் 500 மீட்டருக்கு அப்பால் ஒரு மி.மீ. அளவுகூட பூமியில் அதிர்வு இருக்காது. அணு கதிர்வீச்சுக்கும் தொடர்பில்லை. வளிமண்டலத்தில் இருந்து இயல்பாக வரும் நியூட்ரினோக்களை இனம் கண்டு, அதன் தன்மையை ஆராயும் அடிப்படை அறிவியல் திட்டம்தான் நியூட்ரினோ ஆய்வுத் திட்டமாகும் என்கின்றனர் இத்துறை சார்ந்த வல்லுநர்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் மூல வைகை ஆறு, முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறு, மஞ்சாளாறு, வள்ளல்நதி, சண்முகாநதி, வறட்டாறு, வராகநதி, சுருளியாறு ஆகிய ஆறுகள் உற்பத்தியாகி வைகை அணைக்குச் சென்றடைகிறது. மேலும், முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்படும் தண்ணீர் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுகிறது. ஆறுகள் மற்றும் அணைக்கட்டுகளால் செழித்திருந்த தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் காப்புக் காடுகள் அழிந்து வருவதால் கடந்த 5 ஆண்டுகளாக மழை குறைந்து வறட்சியை சந்தித்து வருகிறது. இதனூடே நியூட்ரினோ திட்டமும் வந்தால் அது இம் மாவட்ட மக்களை மேலும் பாதிக்கும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com