குட்கா வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கர், உதவியாளருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நேற்று சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில்
குட்கா வழக்கு: அமைச்சர் விஜயபாஸ்கர், உதவியாளருக்கு சிபிஐ சம்மன்


குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நேற்று சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அவரது உதவியாளர் சரவணன் விசாரணைக்கு நேரில் ஆஜராக்கோரி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படும் குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணை செய்து வந்தது. 

சிபிஐயின் தில்லி மண்டல ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த கண்ணன், இந்த வழக்கை விசாரித்து வந்தார். அவருக்கு பிரமோத் குமார் என்ற அதிகாரி உதவியாக இருந்தார். இந்த நிலையில், சிபிஐ பொறுப்பு இயக்குநராக அண்மையில் பொறுப்பேற்ற நாகேஸ்வரராவ், விசாரணை அதிகாரி கண்ணன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பிரமோத் குமார் இருவரையும் திடீரென இடமாற்றம் செய்தும்  வழக்கை தில்லி மண்டல பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்து பாபு என்ற விசாரணை அதிகாரியிடம் வழக்கை ஒப்படைத்தும் உத்தரவிட்டுள்ளார். இது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. 

மேலும், சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே. ராஜேந்திரனின் பெயர்களும் இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க இவர்களை இந்த வழக்கிலிருந்து தப்புவிக்கும் முயற்சி. எனவே, இந்த விவகாரம் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு, நேர்மையான, வெளிப்படைத் தன்மையுடனான விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த வழக்கு விசாரணையை மீண்டும் சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்து, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரின் பெயர்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும். இல்லையெனில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிவரும் என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கும், சிபிஐ (பொறுப்பு) இயக்குநருக்கும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் புகார் மனு அளித்திருந்தார். 

இந்நிலையில், குட்கா ஊழல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிரான விசாரணையில் ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு இறுதிகெடுவாக நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது சிபிஐ.

குட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நேற்று சிபிஐ சம்மன் அனுப்பியுருந்து குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com