பிரதமர் வேட்பாளர் ராகுல்: மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
பிரதமர் வேட்பாளர் ராகுல்: மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை, ராயப்பேட்டையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தபோது என் நினைவுக்கு ஒரு நிகழ்வு வருகிறது. 1961-இல் சென்னை மாநகராட்சியை திமுக வென்ற நேரத்தில் திமுக சார்பில் சென்னை ஜிம்கானா கிளப் முன்பு  காமராஜர் சிலையை பிரதமர் ஜவாஹர்லால் நேரு திறந்து வைத்தார்.
2018-இல் அதே நேரு குடும்பத்தைச் சார்ந்த சோனியா காந்தி தற்போது  கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்திருப்பது ஒரு வரலாறு. இன்றைக்கு நரேந்திர மோடியால் இந்தியச் சமூகநல்லிணக்கத்துக்குக் கேடு ஏற்பட்டுள்ளது. அவரால் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அரசியல் சட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால் பாஜக ஆட்சியை எதிர்க்கிறோம். ஒரு நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டால், பொருளாதாரம் சீர்குலைந்தால் அவற்றை சரி செய்வது சாதாரணமான காரியம் அல்ல. 
மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது. இன்னொரு 5 ஆண்டுகள் அவரை ஆளவிட்டால் 50 ஆண்டுகள் இந்தியா பின்னோக்கிப் போய்விடும். 
மோடி தம்மை பிரதமராக மட்டும் நினைக்காமல், தானே எல்லாம் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். சிபிஐ, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளை ஜனநாயக அமைப்புகளாக பார்க்காமல் அவற்றின் மீது அதிகாரம் செலுத்தி வருகிறார்.  அதனால் தான் ஜனநாயகத்தை கட்டிக்காக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் மோடிக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளோம்.  மோடியை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு நாட்டுக்கு நல்லாட்சி தருவதே எங்கள் நோக்கமாகும்.
கஜா புயலால் தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளான போதிலும் சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி வரவில்லை. இதன் மூலம் அவர் தமிழர்களை அலட்சியப்படுத்திவிட்டார். 
 சோனியா காந்திக்கு  ஒன்றை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்திரா காந்தி  ஒருமுறை சொன்னார். ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருக்கக்கூடியவர் கருணாநிதி என்று. அந்தக் கருணாநிதியின் மகனாகிய நானும் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் உறுதியாக இருப்பவன் என்பதை உறுதியோடு சொல்கிறேன்.
1980-ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக வேண்டும் என குரல் கொடுத்தபோது, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று கருணாநிதி கூறினார். 2004-ஆம் ஆண்டு சென்னைத் தீவுத் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியாவைக் குறிப்பிடும் போது, இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்று கருணாநிதி முழக்கமிட்டார்.
இன்று இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியை பிரதமராக நான் முன்மொழிகிறேன். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து ராகுல் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com