ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க முடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: டாஸ்மாக்  விவகாரத்தைப் போன்று ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்க முடியாது. காரணம் டாஸ்மாக் அரசு நிறுவனம்,  ஸ்டெர்லைட் தனியார் நிறுவனம் ஆகும். ஸ்டெர்லைட் ஆலையில் விதிமுறை மீறப்பட்டதால் அரசு நடவடிக்கை எடுத்து ஆலையை மூடியது. 
 இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது காரணமாக தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.
ஸ்டாலின் விருப்பம்:  மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதிக்கு அவருடைய கட்சியின் சார்பில் சிலை திறக்கப்படுகிறது. திமுக விடுத்த அழைப்பின் பேரிலேயே பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். இதனைக் கூட்டணியாகக் கருத முடியாது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக  முன்மொழிந்துள்ளது மு.க. ஸ்டாலினின் விருப்பம். தேர்தல் அறிவித்தவுடன்தான் கூட்டணி அமைக்கக் கூடிய சூழல் உருவாகும். அப்போதுதான் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். 
திமுக தங்களது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஊடகங்கள்தான் கூட்டணி குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற ரூ.1,532 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இதன் மூலம் 3 மாவட்ட விவசாயிகள் பயனடைவார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com