சுடச்சுட

  

  பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் டிச. 21இல் கடையடைப்பு போராட்டம்

  By விருதுநகர்  |   Published on : 18th December 2018 07:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  crackers

  விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி, சிவகாசி மற்றும் திருத்தங்கலில் டிசம்பர் 21 ஆம் தேதி  கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர்களான மாரியப்பன், தேவா, சமுத்திரம் ஆகியோர் திங்கள்கிழமை கூட்டாகத் தெரிவித்தது: பேரியம் நைட்ரேட் என்ற வேதிப் பொருளைக் கொண்டு பட்டாசு தயாரிக்கக் கூடாது. சரவெடி தயாரிக்கக் கூடாது.

  தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம்  மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. இனிவரும் காலங்களில் பசுமைப் பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, தீபாவளி பண்டிகைக்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இதனால், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, டிசம்பர் 11 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் ஜனவரி 22 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. இதனால், மூடப்பட்ட ஆலைகளை திறக்க முடியவில்லை.

  தொழிலாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கக் கட்டடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், லாரி போக்குவரத்து உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

  ஏற்கெனவே, பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி டிசம்பர் 21 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 21 இல் நடைபெறும் இப்போராட்டத்தை ஆதரித்து, சிவகாசி மற்றும் திருத்தங்கலில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.

  அதில், இப்பகுதியில் உள்ள அச்சகம், தீப்பெட்டி ஆலைகள் மற்றும் சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்படும். பட்டாசு ஆலையை திறக்க வலியுறுத்தி நடைபெற உள்ள ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ள உள்ளனர் எனத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai