திமுகவில் அடுத்து இணையபோவது தங்க தமிழ்செல்வனா..? பிரபுவா..?

அமமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததை அடுத்து, அடுத்த விக்கெட்டாக தங்க தமிழ்செல்வன், பிரபு
திமுகவில் அடுத்து இணையபோவது தங்க தமிழ்செல்வனா..? பிரபுவா..?


அமமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததை அடுத்து, அடுத்த விக்கெட்டாக தங்க தமிழ்செல்வன், பிரபு விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தமிழக அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 

அமமுகவுடன் இணைந்து செயல்பட்டதால் பேரவைத் தலைவர் தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றமும் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரனை செந்தில்பாலாஜி வலியுறுத்தி வந்துள்ளார். அதை டிடிவி தினகரன் ஏற்காத நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அமமுகவிலிருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செந்தில்பாலாஜி இணைந்தார்.
 
தினகரன் அணியில் 18 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்ட பிறகு, தினகரனுக்கும், 18 பேருக்கும் இடையே ஏற்பட்ட அதிருப்தியில் முதலில் செந்தில் பாலாஜி திமுகவில் ஐக்கியமானார். இதையடுத்து அமமுகவிலிருந்து அடுத்து இணைய போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தினகரனுடன் கருத்து மோதலில் இருந்து வரும் தங்க தமிழ்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இதையடுத்து அமமுகவில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை பெங்களூரு வரும்படி சசிகலா அழைப்பு விடுத்தார். சசிகலா அழைப்பினை அடுத்து விருத்தாசலம் தொகுதி தற்போதைய எம்எல்ஏ கலைச்செல்வன் உட்பட 12 பேரும் நேற்று சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வனை சசிகலா சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள்ளும் தற்காலிகமாக சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததை அடுத்து, அவரது ஆதரவாளர் திமுகவில் இணையும் நிகிழச்சி வரும் 27 ஆம் தேதி கரூரில் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் தினகரனின் நம்பிக்கைக்கு உரியவரும், அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் சிலரும் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

இதையடுத்து அமமுகவிலிருந்து அடுத்து திமுகவில் இணைய போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், திமுகவில் இணைய உள்ள முன்னாள் அதிமுகவினரான அமமுகவினரை அதிமுகவிற்கு இழுக்கும் முயற்சியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்த பின்னர் தமிழக அரசியல் களத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அடுத்து திமுக, அதிமுகவில் இணையபோவது தங்க தமிழ்செல்வனா, பிரபுவா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com